நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடினார். இந்த நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அரை சதம் அடித்து ஆட்டநாயகன் விருதும் வென்றார். அப்பொழுது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேவாக் விமர்சனம் குறித்த கேள்விக்கு அவர் வித்தியாசமாக பதில் அளித்திருக்கிறார்.
பங்களாதேஷ் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெல்ல வேண்டிய இடத்தில் இருந்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் அன்றிச் நோர்க்கியா அதிவேகமாக வீசிய பந்தை ஷாகிப் அல்ஹசன் ஃபுல் ஷாட் அடிக்க சென்று விக்கெட்டை இழந்தார். இது பங்களாதேஷ் அணியின் வெற்றியையும் பாதித்தது.
ஷாகிப் அல் ஹசனின் மோசமான ஷாட் செலக்சனால் கோபம் அடைந்த வீரேந்திர சேவாக் ” நீங்கள் ஹைடனோ கில்கிரிஸ்டோ கிடையாது. நீங்கள் பங்களாதேஷ் வீரர்தான். எனவே உங்களால் அவ்வளவு அதிவேகமான பந்தை ஃபுல் ஷாட் அடிக்க முடியாது. தெரிந்த ஷாட்டை விளையாட வேண்டும்” என்று விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று வென்றே ஆக வேண்டிய நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டம் இழக்காமல் 46 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான பிரகாசமான வாய்ப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வீரேந்திர சேவாக் விமர்சனம் குறித்து கேட்டதற்கு ஷாகிப் அல் ஹசன் சேவாக்கை தெரியாதது போல் யார்? என்று தெரியாதது போல் திருப்பி கேள்வி கேட்டார். இதற்குப் பின் பதில் அளித்த அவர் ” ஒரு வீரர் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். ஒரு வீரருடைய வேலை ஒரு பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளராக, ஃபீல்டராக தன்னால் முடிந்ததை அணிக்கு செய்வதுதான். மேலும் விவாதங்கள் என்பது இயற்கையாக இருக்கும். அது ஒரு மோசமான விஷயம் என்று நான் நினைக்கவில்லை.
இதையும் படிங்க : இந்திய வீரர்களுக்கு இல்லாத வசதி.. ஆப்கான் அடுத்த சுற்றுக்கு வர முக்கிய காரணம் அதுதான் – ரஷித் கான் பேட்டி
என்னுடைய செயல் திறன் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. அப்படியான எண்ணம் என் வாழ்க்கையில் வந்ததும் கிடையாது. நான் பங்களிக்க முடிந்தால் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் சொன்னது போல இன்று என்னுடைய நாள். நாளை வேறு யாருடைய நாளாக இருக்கலாம். அடுத்த போட்டியில் அப்படியான நாள் வரலாம்” என்று கூறியிருக்கிறார்.






