அடுத்த பினிசர் ரெடி – தமிழக வீரர் ஷாருக்கானை பாராட்டிய கேஎல் ராகுல்

0
191
Shahrukh Khan and KL Rahul

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நேற்றைய போட்டியின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி ஓவரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அதிகபட்சமாக 67 ரன்கள் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் மிக அற்புதமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 40 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் அவுட்டாகி விட, அதன் பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் இறுதியில் வந்த தமிழக வீரர் ஷாருக்கான் கே எல் ராகுல் உடன் இணைந்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 55 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை வாங்கினார்.

- Advertisement -

ஷாருக்கான் எப்பொழுதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்

போட்டி முடிந்ததும் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல், தமிழக வீரர் ஷாருக்கானை பற்றி அதிகமாக பேசினார். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவரது திறமையை நாங்கள் வெகுவாக பாராட்டினோம். எப்பொழுதும் அவர் வலைப்பயிற்சி தளத்தில் அதிரடியான ஷாட்களை அடித்துக் கொண்டே இருப்பார். அதுமட்டுமின்றி அணியில் இருக்கும் அனைவரிடமும் கிரிக்கெட் குறித்த கேள்விகளை சதா கேட்டுக்கொண்டே இருப்பார்.

போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்று எப்படி முடிக்க வேண்டும் என்பது குறித்தும் நெருக்கடியான சமயத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்த யோசனைகளையும் கேட்டு தெரிந்து கொள்வார். நாங்கள் வைத்த நம்பிக்கையை அவர் வீணடிக்கவில்லை. இன்றைய போட்டியில் அவர் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது.

நல்ல கிரிக்கெட்டிங் ஷாட்களை இன்று அவர் விளையாடினார். அவர் அடித்த பவுண்டரிகள் மிக நேர்த்தியாக இருந்தது. தமிழக அணிக்காக நிறைய முறை இப்படி அவர் விளையாடி இருக்கிறார். தமிழக அணிக்கு எப்படி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பாரோ, அதே போன்று நேற்று பஞ்சாப் அணியின் ஆட்டத்தையும் வெற்றியுடன் முடித்துக் கொடுத்தார். இவ்வாறு ஷாருக்கான் குறித்து நேற்று கே எல் ராகுல் புகழ்ச்சியுடன் பேசினார்.

- Advertisement -

ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது 12 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெற்று, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் இனி வரும் போட்டிகளில் ஓரிரு தோல்வி அடைந்தால் பஞ்சாப் அணி 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு இறுதியில் தகுதி பெறும்.