இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தேவையில்லாத ஷாட் ஆடி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது, தற்போது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தில் எப்போதுமே முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிப்பது என்பது முக்கியம். அப்போதுதான் எதிரணிக்கு அது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த சூழலில் லீட்ஸ் நகரில் முதல் ஸ்செஷன் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்தியா தடுமாறும் என நினைத்துதான் பென் ஸ்டோக்ஸ் முதலில் டாசை வென்று பந்து வீசுவதாக கூறினார்.
அதற்கு நேர்மாறாக இந்திய அணி வீரர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் பந்துகளை லாபமாக விட்டு அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடியை பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. குறிப்பாக ராகுல்,ஜெய்ஸ்வாலும் பவுண்டரிகளை அடுத்தடுத்து விரட்டினர். இருவரும் தலா எட்டு பவுண்டரிகளை அடித்து தலா 42 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த சூழலில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே எல் ராகுல் ஆப்சைடில் வெளியே சென்ற பந்தை அடிக்க ஆசைப்பட்டு எட்ஜ் ஆகி ரூட்டிடம் கேட்ச் ஆனார்.
இதனை அடுத்து தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் விளையாடினார். சாய் சுதர்சன் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் ஜாம்பவான்களான டிராவிட்,கோலி, கங்குலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான நாளில் சாய் சுதர்சனும் அறிமுகமாகி இருப்பதால் அவர்களை போல் சாதிப்பார் என ரசிகர்கள் நினைத்தனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் விக்கெட் எடுக்க இப்படி ஒரு மொக்கை வாங்கனுமா? என்ன நடந்தது
ஆனால் தேவையே இல்லாமல் காலுக்கு வெளியே சென்ற பந்தை அடிக்க முற்பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இதனால் 90 ரன்களுக்கு 0 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி 92 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சாய் சுதர்சன் ஆட்டம் இழந்ததும் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கம்பீர் கடுப்பானார். இதனால் விக்கெட்டுகள் இல்லாமல் போராடி வந்த இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்கள் இரண்டு விக்கெட் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.