நேற்று துவங்கிய ரஞ்சி டிராபி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
தற்போது சர்ப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து புறக்கணிப்பு நடந்து வருகிறது. சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் பலமாக தடுமாறி வரும் நிலையில், இதில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய சர்பராஸ் கான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது சர்ச்சையாக மாறியுள்ளது.
மும்பை ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் மிக வேகமாக விழுந்தது. சர்பராஸ் கான் தம்பி முசீர் கான் மூன்றாவது இடத்தில் வந்து 29 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் சித்தேஷ் லாட் மற்றும் சர்ப்ராஸ் கான் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.
இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாட இருவருமே அரை சதம் கடந்து சதம் அடித்தார்கள். சிறப்பாக விளையாடிய கேப்டன் சித்தேஷ் லாட் சதம் அடித்து 179 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
சர்பராஸ் கான் மிரட்டல் அடி
இதைத்தொடர்ந்து ஒரு மனையில் அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்தார். மேலும் தொடர்ந்து விளையாடிய அவர் 219 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 227 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மும்பை அணி 560 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
இதையும் படிங்க : சூரியகுமார் வெற்றி பெற்ற பிறகும் வீரர்களிடம் இதை செய்வதை பார்த்தேன்.. ஆனா தனிப்பட்டு இதை செய்யணும் – முகமது கைஃப் அறிவுரை
தற்போது ரஞ்சி தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் இந்திய கேப்டன் கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருக்கிறார். அதே வேளையில் சர்பராஸ் கான் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்திருக்கிறார். எனவே தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் இருவரும் சர்ப்ராஸ் கானை இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.






