பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் அணியின் லெஜென்ட் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்டாக் வித்தியாசமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு தசாப்தத்திற்கு மேல் இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இரண்டு நாடுகளும் ஐசிசி நிகழ்வுகளில் மட்டுமே நேருக்கு நேராக சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்துவதால் இந்திய அணி செல்லக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்தியாவில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி தவறாமல் வந்து விளையாடுகிறது.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்பவில்லை என்று பரவலான கருத்துக்கள் இந்தியா தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாகவே பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால் செல்லக்கூடாது என்று பேசி வருகிறார்.
இந்த நிலையில் இது குறித்து சக்லைன் முஸ்டாக் கூறும்பொழுது “இது எளிமையானது. இந்தியா வர விரும்பினால் பாகிஸ்தான் வந்து விளையாட முடியும். அவர்கள் வரவில்லை என்றால் அப்படியே விட்டு விட வேண்டும். இதுகுறித்து எந்த பம்பும் செய்ய வேண்டியது கிடையாது. விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் எந்த நல்லதும் கெட்டதும் கிடையாது. இது ஐசிசி தொடர் எனவே இதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராக அணியில் விளையாட வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இப்படி பேசக்கூடிய எல்லோரும் வெளியில் இருக்கக்கூடியவர்கள். இப்படி வெளியிலிருந்து பேசக்கூடியவர்களின் குரல்களைதான் நாம் இந்த விஷயத்தில் கேட்டுக் கொண்டு வருகிறோம். வெளி ஆட்களின் கருத்துக்கள் பிரச்சனை இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இன்னும் 2 ரன்.. டிராவிட் ரெக்கார்டை உடைக்கும் ரோஹித்.. தோனி சாதனையும் முடிவுக்கு வரும்
உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய கிரிக்கெட் நாடான இந்தியா இல்லாமல் ஒரு தொடரை ஐசிசி நடத்தும் பொழுது அதை வெற்றிகரமாக நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் செலவழிக்கும் பணம் திரும்ப கிடைப்பது உறுதியில்லாமல் போய்விடும். எனவே ஐசிசி முடிந்த வரையில் இந்தியாவை விளையாட வைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






