இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் கொடுக்கப்படவில்லை. இது குறித்து முதல் முறையாக சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.
பொதுவாக அருகில் டி20 உலகக்கோப்பை இருந்தால் சஞ்சு சம்சனுக்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கொடுக்கப்படும், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இருந்தால் டி20 அணியில் இடம் கொடுக்கப்படும். இப்படி அவரை ஒரு மாற்று வீரராக மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ரன்கள் குவித்த காரணத்தினால் தவிர்க்க முடியாமல் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கொடுத்தார்கள். ஆனால் பிளேயிங் லெவனில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் வெளியில் இருந்தார்.
மேலும் சஞ்சு சாம்சன் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்திருந்தார். இதன் காரணமாக இந்திய ஒரு நாள் அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விட்டதாக பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விக்கெட் கீப்பர்களாக தேர்வானார்கள்.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “அவர்கள் என்னை அழைத்தால் நான் சென்று விளையாடுவேன். இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் அதைப் பற்றி எதையும் யோசிக்கவில்லை. மேலும் அணி நல்ல முறையில் இருக்கிறது. அதனால் எந்தப் பிரச்சினையும் கிடையாது. தற்போது நான் பாசிட்டிவாக இருக்க விரும்புகிறேன் மேலும் நான் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.
இதையும் படிங்க : 2023 உலக கோப்பை கிடையாது.. அந்த சீரியஸ் தோத்ததுதான் பெரிய ஏமாற்றம் – ராகுல் டிராவிட் பேச்சு
என்னுடைய பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை கொடுத்திருக்கிறேன். இதனால் என்னுடைய விளையாட்டு மேம்பட்டு இருக்கிறது. எனது கேரியர் முன்னேற வேண்டும், எனவே நான் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்தவும், என்னுடைய பயிற்சியில் தீவிரமாக இருக்கவும் நான் முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.