இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து ஒப்பீடுகள் வேண்டாம் என அதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகவும் கவலைக்குரிய வகையில் அமைந்து வருகிறது. இந்த இருவரும் சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்றுவிட்டு டி20 ஃபார்மெட்டில் ஓய்வை அறிவித்த நிலையில் அதற்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடி வரும் போட்டிகளில் மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் இருவரும் அவ்வப்போது ஓரிரு அரை சதங்கள் அடித்து இருந்தாலும் தொடர்ச்சியாக சரியான பேட்டிங் இல்லை.
இதில் விராட் கோலி மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். ரோகித் சர்மா கடந்த மூன்று போட்டிகளாக மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது பேட்டிங் குறித்து ஒப்பீடு செய்ய வேண்டாம் எனவும் ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை முடிந்துவிட்டது, ஆனால் விராட் கோலி இன்னும் நீண்ட காலம் விளையாட வாய்ப்புள்ளது என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலி ரோஹித் சர்மா ஒப்பீடு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரது ஒப்பீடு சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். அதில் விராட் கோலி முன்னணியில் இருக்கிறார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வீரர். ஆனால் ரோஹித் சர்மா நல்ல பேட்டிங் வீரர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இவர்கள் இருவருக்கும் இடையேயான வித்தியாசம். ஆனால் ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பானவர். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் நீண்ட காலம் விளையாடுவார்.
இதையும் படிங்க:கேஎல் ராகுலுக்கு ஏன் இத செஞ்சீங்க.. உங்களால அவரும் இப்போ மாட்டிக்கிட்டாரு – ரோஹித் மீது கவாஸ்கர் விமர்சனம்
இதில் இனி விராட் கோலி குறித்து அதிகம் பேச முடியாது. இந்திய பேட்டிங் பயிற்சியாளர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை மட்டுமே நான் பார்க்க விரும்புகிறேன். அதாவது ஒரு சிறந்த வீரரின் வெளிப்படையான பிரச்சனையை அவரால் தீர்க்க முடியவில்லை. அதனால் விராட் கோலி பற்றி நாம் போதுமான அளவு பேசிவிட்டோம். எனவே இனி அவரை விட்டு விடுவது நல்லது” என்று கூறி இருக்கிறார்.






