டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே அடுத்த சுற்று தகுதி பெற்றுவிட்டது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய ஆல்ரவுண்டரின் செயல்பாட்டை பார்ப்பதற்காக ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
பந்துவீச்சாளர்களின் சொர்க்க பூமியாக விளங்கிய அமெரிக்காவின் நியூயார்க் ஆடுகளத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் என மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இதில் பேட்டிங்கை பொருத்தவரை ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய பேட்ஸ்மேன்களே சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். குறிப்பாக இன்னும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஃபார்முக்கு வரவில்லை.
இருப்பினும் அவரது தரத்திற்கு இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். மேலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வீரராக இருப்பது சிவம் துபே. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய தூபே இந்த உலகக் கோப்பையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறிய தூபே அமெரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 35 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
இன்னும் இவர் பேட்டிங் பார்முக்கு வராத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் இவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக இருப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் தற்போது ஃபார்மில் இல்லை என்றாலும் கவலை இல்லை. அவர்களால் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வர முடியும். உலகக் கோப்பையில் இது போன்ற அனுபவம் வாய்ந்த தரமான வீரர்களையே தேர்வு குழு விரும்புகிறது.
சிவம் துபே குறித்து கேட்கிறீர்கள். அவரது பேட்டிங் பற்றி நீங்கள் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வது சரிதான். ஐபிஎல் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதற்கு வசதியாக இருக்க அமைக்கப்பட்டவை. மேலும் அது ஒரு நீண்ட பெரிய தொடர். ஐபிஎல் தொடரும் உலகக் கோப்பையும் முற்றிலும் வேறுபட்டவை. அங்கு சிறப்பாக விளையாடிய சிவம் தூபேவால் தற்போது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியவில்லை. எனவே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஐபிஎல்லில் ஜொலித்ததை போன்று டி20 உலக கோப்பையிலும் ஜொலிக்க முடியுமா? என்பதைப் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க:62/6.. மீண்டும் சிக்கிய பாகிஸ்தான்.. பேட்டிங்கில் அப்ரிடிகள் தந்த மாற்றம்.. முடிவுக்கு வந்த உலககோப்பை பயணம்
ரிஷப் பண்ட் இந்த தொடரில் நம்பர் 3ல் களம் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவில் மட்டுமின்றி கடினமான பிட்ச் கொண்ட ஆடுகளத்திலும் சிறப்பாக செயல்படுகிறார். அவரை மூன்றாவது வரிசையில் களம் இறக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்தது மிகச் சிறந்த முடிவு” என்று கூறி இருக்கிறார்.