2016 ஐபிஎல் சீசனில் கையில் தையல் போட்டுக்கொண்டு விராட் கோலி செஞ்சுரி அடிச்சாரு.. இந்த வருஷம் அதே வெறியோடு இருக்கிறார் – ஆர்சிபி பயிற்சியாளர் பேட்டி!

0
204

2016இல் கையில் தையல் போட்டுக்கொண்டு விராட் கோலி செஞ்சுரி அடித்தார். அந்த இன்னிங்ஸ் என்னால் இன்றளவும் மறக்க முடியாது. அதே அளவுக்கு வெறியோடு இந்த வருடமும் இருக்கிறார் என்று ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணியுடன் 15 வருடங்களாக பயணித்து வரும் விராட் கோலி பல போட்டிகளில் தனி ஆளாக நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்ற சோகம் நிலவி வருகிறது. இந்த வருடம் கட்டாயம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் அவரும் இருக்கிறார். ரசிகர்களும் அதே எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் சஞ்சய் பாங்கர் விராட் கோலியின் மறக்க முடியாத இன்னிங்ஸ் ஒன்றை பகிர்ந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

“2016ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக என்று நினைக்கிறேன். அந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். ஆனால் அந்த போட்டிக்கு முன்னர் விராட் கோலி என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. கையில் தையல் போட்டுக்கொண்டு விளையாடினார். அப்படி ஒரு வெறியை அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. அதே வெறித்தனத்துடன் இந்த வருடமும் இருக்கிறார். நிச்சயம் கோப்பையை வெல்வதற்கு ஆர்சிபி அணி தயாராகி வருகிறது. சர்வதேச போட்டிகளில் விராட் கோலியின் பார்ம் சிறப்பாக இருப்பதால் அதை இங்கேயும் தொடர்வார் என எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

2016 ஆம் ஆண்டு விராட் கோலி விளையாடியதை எவராலும் மறக்க முடியாது. 16 இன்னிங்ஸ்களில் 973 ரன்கள் விலாசினார். இதில் நான்கு சதங்களும் அடங்கும். தற்போது வரை ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக இது இருக்கிறது. அதில் இவரது சராசரி 81 ஆகும்.

- Advertisement -

2016ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக 15 ஓவராக போட்டி மாற்றப்பட்டது. அதில் கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் அடித்தனர். 15 ஓவர்களில் ஆர்சிபி அணி 207 ரன்கள் விளாசியது. அதில் விராட் கோலி மட்டுமே 50 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.