ரோஹித் சர்மாவையும், விராட் கோலியையும் அணி நிர்வாகம் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். தங்களது பார்மை திரும்பப் பெற அதிக போட்டிகள் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட ரோகித், கோலியின் இடம் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இருவரும் விஜய் ஹசாரே டிராபியிலும், சையது முஷ்தாக் அலி டிராபியிலும் விளையாட உள்ளதாக செய்திகள் வந்த நிலையில் சஞ்சய் பங்கர் இவ்வாறு கூறியுள்ளார்.
பசியோடு இருக்கிறார்கள்:
இது குறித்து பேசிய அவர், “இருவரும் பசியோடும் உடல்திறனோடும் இருக்கிறார்கள் என்றால் அந்தத் தரமுள்ள வீரர்களை நீங்கள் விரும்பத்தான் செய்வீர்கள். அவர்களை வித்தியாசமாக நடத்த வேண்டும், இடம் கொடுக்க வேண்டும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அணியில் இடம் பெறுவது கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கக் கூடாது.”
“இவ்வளவு வருஷங்களாக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் எனப் பாருங்கள். இரண்டு ஃபார்மெட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். அதனால் ஒரு சில பயிற்சி செஷனில் திரும்பவும் ஆட்டத்திற்கு வந்துவிடுவார்கள். ஏனெனில் இதை அவர்கள் பலமுறை செய்திருக்கிறார்கள். இளம் வீரர்களைப் போல இவர்களுக்கு அதிக போட்டிகள் தேவையில்லை.”
சூழலை மாற்றிவிடும்:
“அவர்கள் நன்றாக விளையாடும் போது வித்தியாசம் தெரியும். அவர்கள் இருப்பதனாலே டிரெஸ்ஸிங் ரூம் சூழலை மாற்றிவிடும். டெஸ்ட் தொடரில் அவமானகரமாகத் தோற்ற பிறகு, அவர்கள் இளம் வீரர்களிடம் பேசியிருப்பார்கள். பழையவற்றை மறந்து சுதந்திரமாகவும் அதிகாரத்தோடும் ஆட உதவியிருப்பார்கள்.”
இதையும் படிங்க: 10 ஓவர்.. பாஸ்பாலை வச்சு செய்த ஆஸி.. தவறை திருத்தாத இங்கிலாந்து படுதோல்வி.. 2வது டெஸ்ட் முடிவுகள்
இருவரும் அடுத்து ஜனவரி 11 முதல் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளிலும் அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடுவார்கள் என தெரிகிறது அடுத்த 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அக்டோபர் மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






