இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தற்போது மிகவும் மன காயத்தோடு இருப்பார் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா அணி அடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து சஞ்சய் பாங்கர் பேசியிருக்கிறார்.
கேப்டன் நீக்கம் ஏன்?
தற்போது ரோகித் சர்மா தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து காணப்படுகிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவரை ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள். இதன் காரணமாக தொடர்ந்து அவர் ஒருநாள் அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி உண்டாகி இருக்கிறது.
ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், அவர் கேப்டனாக இல்லாமல் இருக்கும் காரணத்தினால் அணியை விட்டு எளிதாக நீக்கிவிடுவார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாகவே அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிகிறது.
2011ல் இதுவே நடந்தது
இது குறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது ” 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறாத பொழுது இதே அளவு கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து இருந்தார். அப்போது அவர் மிகவும் மனக் காயம் அடைந்தார். இப்போதும் அவர் அதேபோல மனக்காயம் அடைந்திருக்கிறார். எனவே அவர் உடல் தகுதியில் தீவிரம் காட்டி உழைத்திருக்கிறார். நிச்சயம் அவரிடம் இருந்து நாம் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்க்கலாம்”
இதையும் படிங்க : ரோகித், கோலிக்கு இளம் வீரர்களால் நெருக்கடி.. உலககோப்பையில் விளையாடுவது சந்தேகம்.. ரவி சாஸ்திரி கருத்து
“மீண்டும் ரோகித் சர்மாவை அதே பழைய பசியோடு பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் கேப்டனாக இல்லாத போது உள் வட்டத்தில் எல்லா நேரமும் பீல்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. நீங்கள் வெளிவட்டத்திற்கு சென்று ஓடி டைவ் அடித்து பந்துகளை பிடிக்க வேண்டியதாக இருக்கும். தற்போது ரோகித் சர்மா அதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. அவருக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






