ஆஃப்கானிஸ்தான் தொடருக்குப் பிறகு இந்திய இளம் வீரர்களின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த டி20 தொடரில் அபிஷேக் சர்மா சிறப்பாகச் செயல்பட்டுத் தொடர் நாயகன் விருது வென்றார். இந்திய அணியின் இளம் வீரர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தால் உள்நாட்டில் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள்.
இருப்பினும் வெளிநாட்டுச் சூழல்களில் பந்து ஸ்விங் ஆகும்போது இவர்கள் தடுமாறுவது அணிக்குச் சவாலாக அமைகிறது. எனவே வெளிநாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த இளம் வீரர்களுக்கு உள்ளது.
இதுகுறித்து சந்தீப் பாட்டீல் பேசும்போது, “இந்தியாவில் சிங்கமாக இருக்கும் நீங்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பூனையாக மாறிவிடக் கூடாது. அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்சி ஆகியோர் வெளிநாடுகளில் பந்து மூவ் ஆகும்போது சில கடினமான சூழல்களை எதிர்கொண்டதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இளம் வீரர்களின் அதிரடி குறித்து அவர் பேசும்போது, “அபிஷேக் சர்மா அடித்த சதத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. தற்கால இளம் வீரர்களுக்குச் சுதந்திரமாக ஆட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள். முதல் பந்திலிருந்தே பயமின்றி ஷாட்களை ஆடும் திறன் மற்றும் அசாத்திய பவர் அவர்களிடம் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.