இந்திய அணியில் தற்போது கவனம் பெற்று வரும் இளம் வீரர்களில் துருவ் ஜூரலும் ஒருவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பிடித்து வரும் அவர், சரியான வாய்ப்புகள் கிடைத்தால் மூன்று ஃபார்மட்டுகளிலும் இந்திய அணிக்காக விளையாடக்கூடிய வீரராக உருவாக முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதற்கு அவரது மன தைரியமும், கடின உழைப்பும் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூரல் எப்படிப்பட்ட மனநிலையுடன் கிரிக்கெட்டை அணுகுகிறார் என்பதற்கு அவர் கூறிய ஒரு விஷயத்தையும் ஆகாஷ் சோப்ரா எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கிறார். 2024-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினம் போட்டிக்குப் பிறகு ஒரு வாரம் இடைவெளி கிடைத்தபோது, பெரும்பாலான வீரர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால் ஜூரல் பயிற்சி செய்த இடத்துக்குச் சென்று தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “ஜூரல் இரண்டு நாட்களில் ஜூபின் பரூச்சாவுடன் இணைந்து 230 ஓவர்கள் பேட்டிங் செய்தார். அவர் மிகவும் கடினமாக உழைத்து தன்னை ஒரு மெஷின் போல மாற்றிக்கொள்கிறார். அழுத்தம் மற்றும் போட்டியின் தேவைகள் குறித்து அவர் கவலைப்படுவதில்லை. மூன்று ஃபார்மட்டிலும் விளையாடக்கூடிய வீரராக அவர் மாறலாம். அவருக்கு தேவையானது வாய்ப்புகள் மட்டுமே. அவர் எதையும் மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை; அவரது வளர்ச்சி மேல்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவருடைய திறனுக்கான உச்சவரம்பு மிகவும் உயரமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.