சாம்சன்108.. அர்ஸ்தீப்4.. தென் ஆப்பிரிக்காவை சுருட்டி இந்தியா தொடரை வென்றது.. கோலி வரிசையில் ராகுல்!

0
2805
ICT

இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே, அந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று, தொடர் சமநிலையில் இருந்தது.

எனவே முக்கியத்துவம் மிகுந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. இந்திய அணியில் ருத்ராஜ் மற்றும் குல்தீப் இடத்தில் ரஜத் பட்டிதார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரஜத் பட்டிதார் 22, சாய் சுதர்சன் 10, கே எல் ராகுல் 21 என முதல் மூன்று விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு விழுந்துவிட்டது. நெருக்கடியான நிலையில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி 30 ஓவர்களுக்கு பிறகு கொஞ்சம் அதிரடி காட்ட ஆரம்பித்தது. சஞ்சு சாம்சன் தனது இரண்டாவது வாய்ப்பில் தனது அரை சதத்தை கடந்தார். திலக் வர்மா தன்னுடைய முதல் சர்வதேச அரை சதத்தை அடித்து, 77 பந்துகளில் 55 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 116 ரன்கள் குவித்தது.

மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் எட்டு வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தனது முதல் சதத்தை 110 பந்துகளில் அடித்து அசத்தினார். மொத்தம் 114 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் ரிங்கு சிங் அதிரடியாக 27 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் 38 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் பியூரன் ஹென்றிக்ஸ் 3, பர்கர் 2 விக்கட்டுகள் கைப்பற்றினார்கள்.

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் 19, வான்டர் டேஸன் 2, மார்க்ரம் 36, கிளாசன் 21, டேவிட் மில்லர் 10 என முக்கிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

இந்தப் போட்டியிலும் கடந்த போட்டியில் சதம் அடித்த துவக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்சி 87 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த முல்டர் 1, கேசவ் மகாராஜ் 15, லிசார்டு வில்லியம்ஸ் 2, பியூரன் ஹென்றிக்ஸ் 18 ரன்கள் என ஆட்டம் இழந்தார்கள்.

இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 45 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதை எடுத்து இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் அர்ஸ்தீப் சிங் 4, ஆபீஸ்கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்கள் என கைப்பற்றினார்கள்.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்கின்ற சிறப்பை கே.எல் ராகுல் பெற்றார். 2018 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 எனக் கைப்பற்றி இருந்தது. கடந்த முறை கே எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.