குஜராத் அணி பேட்டிங் சரிவு ; தனி ஆளாக நின்று அரை சதம் விளாசி அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்ஷன்

0
108
Sai Sudharshan fifty vs PBKS

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 48வது போட்டியில், நவி மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணியும், மயங்க் அகர்வாலின் பஞ்சாப் அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டி பஞ்சாப்புக்கு ஏறக்குறைய கட்டாயம் ஜெயித்தே ஆகவேண்டிய போட்டிதான்!

குஜராத் அணி ஆடிய ஒன்பது ஆட்டங்களில் ஹைதராபாத் அணியுடன் மட்டுமே தோல்வியைச் சந்தித்து, எட்டு ஆட்டங்களை வென்று 16 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, பிளே-ஆப்ஸ்க்குள் நுழைந்து விட்டது என்றே கூறலாம். பஞ்சாப் அணி ஆடிய ஒன்பது ஆட்டங்களில் நான்கில் மட்டுமே வென்று, எட்டுப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணியிலிலும் எந்த மாற்றங்களும் இல்லை. பஞ்சாப் அணியிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆச்சரியம் அளிக்கும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தத் தொடரில் இது இரண்டாவது முறை. பேட்டிங் ஆர்டர் பலகீனமாக இருப்பதால், சேஸிங் அழுத்தம் இல்லாமல் இயல்பாக விளையாடுவதற்காக இதைச் செய்திருக்கிறார்.

குஜராத் அணியின் இன்னிங்சை துவங்க வந்த சுப்மன் கில், விர்திமான் சஹா ஜோடி நல்லவிதமாக ஆரம்பித்தாலும், சுப்மன் கில் தேவையற்று ரன்-அவுட் ஆனார். அடுத்து களம்புகுந்த தமிழகத்தின் சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒரு முனையில் கேப்டன் ஹர்திக், மில்லர், திவாட்டியா, ரசீத்கான் என இந்தத் தொடரின் கதாநாயகர்கள் ஒருவரும் நிலைக்கவில்லை. ஆனால் சாய் சுதர்சன் எந்தப் பதட்டத்தையோ, பரபரப்பையோ ஆட்டத்தில் காட்டாமல், ஆட்ட சூழலை உணர்ந்து, ஆட்டத்தை நகர்த்தி வந்தார். பொறுப்பாக ஆடிய சாய் சுதர்சன் 40 பந்துகளில், தனது முதல் ஐ.பி.எல் அரைசதத்தை அர்ஷ்தீப் சிங் ஓவரில் சிக்ஸர் அடித்து எட்டி அசத்தினார். டெத் ஓவர்களில் அசத்தி வரும் அர்ஷ்தீப் சிங்கை, டெத் ஓவரில் வைத்து சிக்ஸர் அடித்து, அவரிடமிருந்து முதல் டெத் ஓவர் சிக்ஸை வாங்கியது சிறப்பானது. இறுதியாக சாய் சுதர்சனின் 50 பந்த 64 ரன்களோடு, இருபது ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 143 ரன்களை எட்டியது!