வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தான் முக்கியமான மூன்று விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக சாய் சுதர்சன் தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கிடைத்த வாய்ப்பை சாய் சுதர்சனால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மேற்கொண்டு இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவரால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
சாய் சுதர்சன் செய்த மாற்றம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் 87 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்தார். ஆடுகளம் மெதுவாக இருந்த காரணத்தினால் சாய் சுதர்சன் பேக் புட்டில் விளையாடியது ரன்கள் எடுப்பதற்கு வசதியாக அமைந்தது.
மேலும் களத்தில் இறங்கியதும் ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை எடுத்து விட்டு, நின்று விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதால் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததாக சாய் சுதர்சன் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து சில முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மூன்று விஷயங்கள் கற்றுக் கொண்டேன்
இது குறித்து சாய் சுதர்சன் பேசும் பொழுது ” இங்கிலாந்தில் நாங்கள் நல்ல சவாலை கொடுத்துவிட்டு இந்தியா வந்து டெஸ்ட் தொடரை வெல்வது சிறப்பாக இருக்கிறது. நான் ஒட்டுமொத்தமாக விளையாடி உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இதை வைத்துக்கொண்டு நான் மேலும் முன்னேற வேண்டும். இத்தோடு அணிக்காகவும் கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் இந்தியா வெற்றி.. புள்ளி பட்டியலில் வலிமையான இடம்.. காத்திருக்கும் சவால்
“நீங்கள் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும்பொழுது அங்கு என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வது, பொறுப்புடன் விளையாடக் கற்றுக் கொள்வது, ஆபத்தான முறையில் விளையாடாமல் ரிஸ்க் பிரீ முறையில் விளையாடுவது, இவையெல்லாம் எனக்கு கிடைத்திருக்க கூடிய மிக முக்கியமான பாடங்கள். நான் கில் உடல் நிறைய விளையாடி இருக்கிறேன். அவர் ஒரு கேப்டனாக வீரர்களுக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடியவர். மீண்டும் பல வாய்ப்புகளை பெற காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






