சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையோடு இந்தியாவின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். டி20 ஃபார்மெட்டில் கில் தொடக்க வீரராக களமிறங்க மறுமுனையில் தற்போது ஜெய்ஸ்வால் களமிறங்கி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆன ஸ்ரீதர் டி20 கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் தொடக்க இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா டி20 உலக கோப்பையோடு கேப்டன் பதவியில் இருந்து விலகியதுடன் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். இதனால் இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாக சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டார். மேலும் துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டார். சூரியகுமார் யாதவ் அடுத்த டி20 உலக கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.
கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட ரோஹித் சர்மாவின் தொடக்க இடத்திற்கு தற்போது இடது கை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் நிரந்தரமாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவாரா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்து தன்னை நிரூபித்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தமிழக வீரரான சாய் சுதர்சன் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஜெய்ஸ்வால் பேட்டிகளில் சற்று தடுமாறும் பட்சத்தில் இந்த இருவரில் யாராவது ஒருவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடத்தை பிடிக்கலாம் என்று ஸ்ரீதர் நம்புகிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜெய்ஸ்வாலுக்கு நிறைய போட்டி வீரர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவருக்கு போட்டியாளர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் கழுத்து வரைக்கும் கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள். ஆனால் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இரட்டை சதமும், சதமும் அடித்ததை பார்த்தோம். பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதற்கான திறமை அவரிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:3வது ODI: நாளை உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள்.. ரோகித் கம்பீர் பெருமையை காப்பாற்றுவார்களா?
அவர் ஐபிஎல் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதைப் போல டி20 கிரிக்கெட்டில் அவரால் சிறந்ததை வெளிப்படுத்த முடியும். என்னைப் பொருத்தவரை கில் இந்திய அணியின் மூன்று வடிவிலான பிளேயர். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார். 2027ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு அவர்தான் அனைத்து ஃபார்மேட்டிலும் கேப்டனாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.