தற்போது உலக கிரிக்கெட் அமைப்பு ஐசிசி மொத்தமாக இந்தியர்கள் வசத்தில் இருப்பதால் அந்த அமைப்பு இருப்பதே அர்த்தமற்றது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயித் அஜ்மல் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தற்போது ஐசிசி அமைப்பின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் செயலாளர் ஜெய் ஷா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம் ஏன்?
இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை தொடர்கள் நடக்கும் பொழுது பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடியது. அதே சமயத்தில் இந்திய அணி பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்த பொழுது அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்தியா விளையாடிய போட்டிகள் அனைத்தும் துபாயில் வைத்து நடத்தப்பட்டது.
தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முஸ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் இந்தியா வந்து டி20 உலக கோப்பையில் விளையாட முடியாது என அறிவித்திருக்கிறது. தங்கள் போட்டிகளை மொத்தமாக இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறது. ஆனால் அந்த பங்களாதேஷின் கோரிக்கையை ஐசிசி ஏற்க வில்லை என்று கூறப்படுகிறது.
ஐசிசி இருப்பதில் அர்த்தம் இல்லை
இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சயித் அஜ்மல் பேசும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாடாமல் இருப்பதற்கு தர்கரீதியாக எந்த நியாயமான காரணமும் கிடையாது. தற்போது ஐசிசி அமைப்பு இந்தியர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த அமைப்பு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை”
இதையும் படிங்க : விராட் கோலி சொல்றதை செய்யக்கூடிய ஆள்.. அதை எவ்வளவு பேசினாலும் போதாது – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“ஐசிசி எடுக்கும் முடிவுகளை இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கும் பொழுது அந்த அமைப்பு இருப்பதால் என்ன நன்மை? எனவே இந்த அமைப்பு கிரிக்கெட் உலகத்திற்கு தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.






