இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியதற்குப் பிறகு தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்திய அணியை காப்பாற்றிய விதம் குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒன்ரறை மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்கி விளையாடி வருகிறது. நீண்ட இடைவெளி இருந்ததால் நல்ல புத்துணர்ச்சியோடு இந்திய அணி முதல் போட்டியில் களம் கண்டது. வங்கதேச அணியும் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் மிகுந்த நம்பிக்கையோடு முதல் போட்டியில் விளையாடியது.
நினைத்தது போலவே வங்கதேச அணி இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே வீழ்த்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆறு ரன்னில் வெளியேற, துணை கேப்டன் கில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மேலும் அதற்குப் பிறகு மிடில் வரிசையில் களமிறங்கிய விராட் கோலியும் ஆறு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளிக்க, 10 ஓவர்களுக்கு உள்ளாகவே 34 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இந்திய அணியின் நான்கு விக்கெட்டுகளை வங்கதேச அணி வீரர் ஹாசன் முகமுத் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதற்குப் பிறகு இக்கட்டில் இருந்த இந்திய அணியை ஜடேஜா மற்றும் அஸ்வின் கூட்டணி இருவரும் சிறப்பாக விளையாடி 227 பந்துகளில் 195 ரன்கள் குவித்து சிறந்த பாட்னர்ஷிப்பை அமைத்தனர். ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்த இந்திய அணி தற்போது இவர்களது சிறந்த ஆட்டத்தின் மூலமாக வலுவான நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளத்தில் “விரக்தியிலிருந்து ஆதிக்கத்திற்கு. அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆட்டங்கள் இந்திய அணியை திசை திருப்பி இருக்கிறது. இந்த ஆல் ரவுண்ட் புத்திசாலித்தனம் விலைமதிப்பற்றது. சூப்பர் பார்ட்னர்ஷிப் பாய்ஸ்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க:ஜெய்ஸ்வாலுக்கு இருக்கும் பிரச்சனையை.. வேற யார்கிட்டயும் பார்க்கல.. தம்பி இத சரி செய் – அஜய் ஜடேஜா அறிவுரை
இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் எப்படியும் வங்கதேச அணிக்கு 500 ரன்களுக்கு மேல் டார்கெட் வைக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடுவது குறிப்பிடத்தக்கது.