இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியோடு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவருக்கு உணர்ச்சி மிக சில கருத்துக்களை கூறி வழி அனுப்பி இருக்கிறார்.
2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 700க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக தனது ஓய்வினை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சன், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி மொத்தமாக இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார். அவருக்கு மைதானத்திலேயே இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஆன சச்சின் டெண்டுல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் அவர் கூறும் பொழுது “ஹேய் ஜிம்மி! நம்பவே முடியாத 22 வருட ஸ்பெல் மூலம் நீங்கள் ரசிகர்களை கவர்ந்து விட்டீர்கள். நீங்கள் விடை வரும்போது எனது சிறிய ஆசையாக வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். அந்த அதிரடி, வேகம், துல்லியம், ஸ்விங் மற்றும் அபாரமான உடற் தகுதியுடன் நீங்கள் பந்து வீசியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விளையாட்டின் மூலம் நீங்கள் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தி உள்ளீர்கள், வாழ்க வளமுடன்” என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட்டின் கிளப் அணியான கவுண்டி கிளப் லங்காஷயர் 2002ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சால் ஈர்க்கப்பட்டதையும், அப்போதைய இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் என்றும் கூறியதாக டெண்டுல்கர் நினைவு கூர்ந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:20 வருட கிரிக்கெட் வாழ்க்கை இப்ப வலிக்குது.. இந்தியா ஆஸில அதை செஞ்சதுதான் சந்தோஷம் – ஜேம்ஸ் ஆண்டர்சன் உருக்கமான பேச்சு
இதுவரை 188 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளையும், 194 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.