இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வலது கை துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்ப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்று இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.
நேற்று டி20 உலகக் கோப்பை இரண்டாவது சுற்று இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிறது.
தற்போது இந்திய அணியில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் துவக்க ஆட்டக்காரராக வருகிறார்கள். இதுவரை இந்திய அணி விளையாடியிருக்கும் 5 போட்டிகளில் கடைசி நான்கு போட்டிகளில் எதிரணிகள் பகுதி நேர ஆப் ஸ்பின்னரை வைத்து முதல் ஓவரை வீசி இருக்கின்றன. இந்த முதல் ஓவரில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தும் இருக்கிறது.
இதுவே துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எதிரணிகள் இந்த திட்டத்தை கொண்டு வராது. எனவே திலக் வர்மாவை நீக்கிவிட்டு அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும், மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து ரியான் டென் டஸ்கேட் கூறும்பொழுது ” நாங்கள் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் எதிரணிகள் பகுதி நேர ஆப் ஸ்பின்னரை வைத்து முதல் ஓவரை வீசி இருக்கின்றன. இந்திய அணி அந்த முதல் ஓவரில் விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கின்ற காரணத்தினால் அடுத்து வருகின்ற பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தம் ஏற்படுகிறது”
இதையும் படிங்க : கம்பீர் இது ஐபிஎல் கிடையாது.. உங்களுக்கு எந்த வகையில அவர் தாழ்ந்தவரா போயிட்டார்.. இந்த அணி தவறு – அஸ்வின் கருத்து
“கடந்த 18 மாதங்களாக ரன் எடுத்து தற்போது ரன் எடுக்காமல் இருக்கும் வீரர்களை தொடர்ந்து நம்ப வேண்டுமா? அல்லது மாற்றங்கள் செய்து சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வர வேண்டுமா? ஒரு வலதுகை பேட்ஸ்மேன் மேலே இருப்பது திட்டரீதியாக அவசியமாகிறதா? அடுத்த இரண்டு போட்டிகளுக்கு முன்பாக இந்த விஷயங்கள் எங்கள் அணியில் மிக முக்கியமான பேசுபொருளாக இருக்கும். நாங்கள் இது குறித்து விவாதங்கள் நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.