சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை தோனி சும்மா தரல.. ருதுராஜின் கேப்டன்சி பேட்டிங் ரெக்கார்ட்

0
323
CSK

இன்று மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே 17ஆவது ஐபிஎல் சீசனில் முதல் போட்டி துவங்க இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சிஎஸ்கே அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிசிஸ் கேப்டனாக வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் 27 வயதான புதிய கேப்டன் ருதுராஜ் வருகிறார். இவர்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஜோடியாக இருந்தவர்கள் என்பது சுவாரசியமானது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அணியின் நலனை கருத்தில் கொண்டு தொலைநோக்காக யோசித்து, தான் விளையாடும் பொழுது ஒரு கேப்டனை கொண்டு வர வேண்டும் என்று ரவீந்திர ஜடேஜாவுக்கு மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை கொடுத்தார். ஆனால் ஜடேஜாவால் கேப்டன்ஷிப் பொறுப்பை தாங்க முடியாமல், அவரது அற்புதமான ஃபீல்டிங் திறமை கூட பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அணிக்குள் சில பிரச்சனைகளும் உருவாக மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அதே பாணியில், அதே நோக்கத்திற்காக இளம் வீரர் ருதுராஜ் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கேப்டன் மாற்றம் விஷயத்தில் கசப்பான அனுபவம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கின்ற காரணத்தினால், ருதுராஜ் கேப்டன் பொறுப்புக்கு சரியானவராக இருப்பாரா?

ருதுராஜ் கேப்டன் பொறுப்புக்கு சரியானவரா?

ருதுராஜ் தனது மாநில அணியான மகாராஷ்டிரா அணிக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 2020 ஆம் ஆண்டு முதல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரையில் இவரது தலைமையில் இவரது மாநில அணி எந்த பட்டங்களையும் வெல்லவில்லை என்றாலும் கேப்டன்சி இவருடைய பேட்டிங்கை பாதித்தது கிடையாது. 2021ஆம் ஆண்டு சையத் முஸ்டாக் அலி டி20 டிராபியில் ஐந்து போட்டிகளில் 51 ஆவரேஜில் 150 ஸ்ட்ரைக்ரேட்டில் 3 அரைசதங்களுடன் 259 ரன்கள் குவித்தார்.

2021 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபியில் ஒரு சீசனில் அதிக சதம் அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்து நான்கு சதங்கள் அடித்தார். மொத்தம் ஐந்தே போட்டிகளில் 150 ஸ்ட்ரைக்ரேட்டில், 112 ரன் ஆவரேஜில் 603 ரன்கள் குவித்தார். இதில் ஒரு இரட்டை சதமும் அடக்கம். இந்தத் தொடரில் காலிறுதியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து இருந்தார். மேலும் இந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் சதம் அடித்திருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியால் வெல்ல முடியவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி தங்கப்பதக்கம் வென்று இருக்கிறார். மூன்று போட்டிகளில் விளையாடிய இந்திய அணி மூன்று போட்டிகளையும் வென்றது. ஒட்டுமொத்தமாக கேப்டனாக அவருடைய செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது.

இதையும் படிங்க : சேப்பாக்கத்தில் ஆர்சிபி-யின் பரிதாப நிலை .. மாஸ் காட்டும் சிஎஸ்கே மொத்த புள்ளி விபரங்கள்

குறிப்பாக கேப்டனாக அவர் அழுத்தம் மிகுந்த நாக் அவுட் போட்டிகளில் உள்நாட்டிலும் மற்றும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். கேப்டன்சி பொறுப்பின் அழுத்தம் மற்றும் நாக் அவுட் போட்டிகளின் அழுத்தம் அவரை பாதிக்கவில்லை. இதேபோல் கேப்டனாக பந்துவீச்சாளர்களிடம் இருக்கும் தனித்திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் அவர் அணியை சேர்த்து நடத்தும் பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே கேப்டனாக ஜடேஜாவுக்கு நடந்தது ருதுராஜுக்கு நடக்காது என்று நம்பலாம்!