இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்ததாக இதே இந்திய அணியோடு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்க தயாராக உள்ளது. இதன் போட்டிகள் வருகிற ஆறாம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருத்ராஜ் கெயிக்வாட் இந்திய டி20 அணியில் இடம் பெறாததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
வங்கதேச அணிக்கு டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அடுத்ததாக சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய முன்னணி வீரர்கள் டி20 தொடரில் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் இனி இந்திய அணிக்கு நிரந்தர வீரராக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அந்த நிகழ்வு அப்போது சர்ச்சையானதை தொடர்ந்து சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம் பெறாதது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு மிகச்சிறந்த வீரர் இந்திய அணியில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்த நிலையில் தற்போது அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை இருப்பதால் வீரர்களுக்கு காயம் ஏற்பட உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட்டை மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக இந்திய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏதேனும் காயம் அடையும் பட்சத்தில் ருத்ராஜ் அடுத்த தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம்.
இதையும் படிங்க:இந்திய அணியை எங்க பாகிஸ்தான்னு தப்பு கணக்கு போட்டுட்டாங்க.. ரோகித் டீம் வேற மாதிரி – பாக் பசித் அலி பேட்டி
இதனால் அவர் தற்போது மும்பை அணிக்கு எதிரான இராணி கோப்பை 2024 தொடரில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு சிவப்புப் பந்து தொடரில் கேப்டனாக செயல்பட்டு விளையாடி வருகிறார். சிவப்பு பந்து தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட வேண்டி வரும் என்பதால் அதற்கு முன்னதாக சிறிய அனுபவம் தேவைப்படும் நிலையில் கம்பீர் போட்ட மாஸ்டர் பிளானால் ருத்ராஜ் இதில் விளையாடி வருவதாக பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.