இந்திய வெள்ளைப்பந்து அணிக்கு குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நான்காவது இடத்தில் விளையாடுவதற்கான பேட்ஸ்மேன் மற்றும் பேக்கப் விக்கெட் கீப்பர் இந்த இரண்டும் தற்போது தேடலில் இருக்கிறது.
இதுபோலவே இந்திய அணிக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்து வருகிறது. அது என்னவென்றால் பேட்டிங் வரிசையில் எட்டாம் இடத்தில் விளையாடக்கூடிய அளவுக்கான மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார்.
தற்பொழுது ஹர்திக் பாண்டியா ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அணியில் இருந்தாலும் கூட, மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக எட்டாம் இடத்தில் பேட்டிங் செய்யக்கூடியவராக ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார். அந்த இடத்திற்கு வலது கை வேகப் பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் தற்பொழுது பொருத்தமானவராக காணப்படுகிறார்.
சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ரன்கள் கொஞ்சம் கசிந்தாலும் கூட, எதிர்பாராத நேரத்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அணிக்கு ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கக் கூடியவராக இருக்கிறார். இதை அவர் தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்கிறார்.
இது குறித்து தற்போது பேசி உள்ள அவர்
“முதல் ஓவராக இருந்தாலும் சரி கடைசி ஓவராக இருந்தாலும் சரி நான் எப்பொழுதும் விக்கெட்டை பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பேன். விக்கட்டை கைப்பற்றுவதால் ஆட்டத்தை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு பவுண்டரியை விட்டுத் தரலாம் ஆனால் விக்கட்டை கைப்பற்றுவேன். இது மற்ற பந்துவீச்சாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும். அணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்கு இருக்கிறது. தற்போது என் வேலை விக்கெட்டுக்கு பின்னால் செல்வதுதான்.
ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி நான் பந்து வீசுகிறேன் என்பதில் நான் நன்றாக உணர்கிறேன். கிரிக்கெட் விளையாடும் வடிவம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், உங்கள் ஆட்டத்தில் நீங்கள் புதியவைகளை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பும்ரா, சமி, சிராஜ் மூவரும் இல்லாத பொழுது நான் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றது ஏற்றுக் கொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கிறது. எங்களுக்கு அடுத்த வாய்ப்பு இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் கிடைக்கும் என்று தெரியும். இதனால் அந்த தோல்வியை மறப்பது கடினமாக இருக்கிறது. ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது! என்று கூறி இருக்கிறார்!