வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவித்திருக்கிறது.
கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் அசுரத்தனமாக ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் தற்பொழுது உலகக்கோப்பை தொடர்களுக்கு தகுதி பெற முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மீண்டும் முன்னுரிமை கொடுக்க முடிவு செய்திருக்கிறது.
வெளியான இரண்டு அறிவிப்புகள்
தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கிரேக் பிராத்வெயிட் கேப்டனாக செயல்பட்டு கொண்டு வருகிறார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று இருந்தது. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக இளம் திறமைகளைக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி உருவாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக கிரேக் பிராத்வெயிட் கேப்டன் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இத்துடன் துணை கேப்டனாக சுழல் பந்துவீச்சாளர் ஜோமைல் வாரிகன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
நான் முழுமையாக ஆதரிக்கிறேன்
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி பேசும்பொழுது “இந்த நியமனத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எங்களுடைய புதிய கேப்டன் சக வீரர்களின் மரியாதையைப் பெற்றவராக இருக்கிறார். இந்தப் பதவிக்கான பொறுப்புகளை புரிந்து கொண்டு, அணியை முன்னெடுத்துச் செல்வதற்கான பண்புகளை ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு பின்னால் பிராந்தியத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் திரள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : திரும்ப தொடங்கும் ஐபிஎல்லில் மீண்டும் சோகம்.. ரசிகர்களுக்கு கவலையான செய்தி – வெளியான தகவல்கள்
தற்போது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தங்களுடைய தீவு கூட்டங்களில் எங்கெல்லாம் இளம் திறமைகள் இருக்கிறதோ அதை கண்டுபிடித்து கொண்டு வர மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முடிந்த அளவுக்கு போராட வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் முடிவு செய்திருக்கிறது. தற்போது இதை உலக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.






