இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விஷயம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு தரப்பு பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்பதற்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்து வரலாறு படைத்தார். ஆனால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு போதுமானதாக அமையவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவரது கேப்டன்ஷிப் மோசமாக அமைந்ததோடு பேட்டிங்கும் குறிப்பிடும்படியாக அமையவில்லை.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து தொடருக்காக பிசிசியை புதிய கேப்டனை எதிர்பார்க்கிறது என அறிவிப்பு வெளியான சில மணித்துளிகளிலேயே ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பிசிசிஐ எந்தவிதமான அழுத்தம் ரோகித் சர்மாவுக்கு கொடுக்கவில்லை எனவும் இது அவரே சொந்தமாக எடுத்த முடிவு என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா மீது அழுத்தமா?
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதைப் பொருத்தவரை அவரது முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஓய்வு முடிவை எடுக்கும் வீரர்கள் மீது நாங்கள் எந்தவிதமான அழுத்தத்தையும் செலுத்துவதில்லை. எதையும் பரிந்துரைக்கவோ அல்லது அவரிடம் எதையும் சொல்லவோ மாட்டோம் என்பது எங்களின் கொள்கையாகும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. இதுக்கு போட்டி வச்சா.. சிஎஸ்கே தான் நிச்சயமா சாம்பியன் ஆகும் – இர்பான் பதான் பேச்சு
அவரை நாம் எவ்வளவு அதிகமாக பாராட்டுகிறோமோ அவரது செயல்பாடை பொறுத்தவரை அது நிச்சயம் குறைவாகவே இருக்கும். அவர் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறவில்லை. எனவே அவரது அனுபவம் மற்றும் திறமையை நாங்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்வோம். மேலும் அவரை எதிர்காலத்திற்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என ராஜீவ் சுக்லா பேசியிருக்கிறார்.






