ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதே சமயத்தில் பந்து வீச்சுக்கு சாதகமான கண்டிஷனில் அருமையான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்.
இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டதால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாற்றத்தை சந்தித்தார்கள். கேப்டன் கில் ஒன்பது ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ரோகித் ஸ்ரேயாஸ் அபாரம்
இந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 97 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 73 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 77 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 136 பந்துகளில் 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ரோகித் சர்மாவின் பழைய திட்டம்
இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் தன்னுடைய பழைய பேட்டிங் திட்டத்தை கொண்டு வந்தார். ஆரம்பத்தில் மிக நிதானமாக ஆரம்பித்து பின்பு அடித்து விளையாடும் திட்டத்தை வைத்து விளையாடினார். ஒரு முனையில் இருந்து மிகச் சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் தொடர்ந்து ஏழு ஓவர்கள் பந்து வீசி நெருக்கடி கொடுத்தார்.
இதையும் படிங்க : தொடர்ந்து 2வது டக்.. ஆனால் களத்தில் விராட் கோலி செய்த காரியம்.. மோசமான சாதனையிலும் மரியாதை – என்ன நடந்தது?
ஹேசில்வுட் தொடர்ந்து வீசிய ஏழு ஓவர்களில் ஐந்து ஓவர்களுக்கான பந்துகளை ரோகித் சர்மா மட்டுமே தனியாக விளையாடினார். இதன் காரணமாக ஒரு முனையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான பந்துவீச்சில் ஆட்டம் இழக்கும் அபாயத்தை ரோகித் சர்மா தடுத்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் நெருக்கடி இல்லாமல் விளையாடினார். மேலும் சிறந்த பார்ட்னர்ஷிப் உருவாக ஆரம்பித்தது. ரோகித் சர்மா இதே போல விக்கெட்டுக்கு மரியாதை கொடுத்து விளையாடினால் இன்னும் நிறைய ரன்கள் எடுப்பார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






