19 வயதாகும் இவர் கூடிய விரைவில் இந்திய அணியில் அனைத்து ஃபார்மேட்டிலும் விளையாடப் போகிறார் – ரோஹித் ஷர்மா நம்பிக்கை

0
897

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடந்து முடிந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பும் முடிவுக்கு வந்தது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மகேந்திர சிங் தோனி 36* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 15வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு எளிதாக வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 34* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அறிமுக ஐபிஎல் தொடரிலேயே அசத்தி வரும் திலக் வர்மா

19 வயதான திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தன்னுடைய முதல் ஐபிஎல் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறார். தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய ஆட்டமும் அணுகுமுறையும் மிக அபாரமாக இருந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது மிக நிதானமாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை திலக் வர்மா வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 368 ரன்கள் குவித்துள்ளார்.இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 40.89 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 132.85 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் இந்திய அணியில் அனைத்து ஃபார்மேட்டிலும் இவர் விளையாடுவார்

நேற்று போட்டி முடிந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா திலக் வர்மாவை பாராட்டிப் பேசியிருக்கிறார்.”19 வயதாகும் அவர் தன்னுடைய முதல் ஐபிஎல் தொடரிலேயே இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார். இது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. எந்தவித அழுத்தமும் இன்றி பொறுமையாக காணப்படுகிறார்.

இவரிடம் நுட்பமும் அதே சமயம் சுபாவமும் நிறைந்திருக்கிறது. தனது அணிக்காக நிறைய ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும் என்கிற தாகமும் இவருக்கு இருக்கிறது. இவருடைய விஷயத்தில் எல்லாம் பிரகாசமாக இருக்கிறது. இவர் கூடிய விரைவில் இந்திய அணியில் அனைத்து ஃபார்மேட்டிலும் இவர் விளையாடுவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ரோஹித் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.