கம்மின்ஸ் அதிரடி அரை சதம் ; நாங்கள் இதே நிலையில் தொடர்ந்திருக்க விரும்பவில்லை – தோல்வி குறித்து மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேச்சு

0
196
Rohit Sharma about loss against KKR

நேற்றைய ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பதின்மூன்றாவது ஆட்டம் மும்பை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே, மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் நடைபெற்றது. இங்கு பனிப்பொழிவு அச்சுறுத்தல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஷ் பீல்டிங் செய்ய முடிவெடுக்க, மும்பை அணியின் பேட்டிங்கை துவங்க, கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் வந்தனர். ஆனால் ரோகித் சர்மாவின் மோசமான துவக்கம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்து. அவருக்குப் பின் இறங்கிய பிரிவிஸ் டிவால்ட், திலக்வர்மா குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு அளிக்க, ஒருமுனையில் நிதானித்து அதரடியில் இறங்கிய சூர்யகுமார் அரைசதம் அடித்தார். இறுதியில் ஐந்து பந்தில் பொலார்ட் 22 ரன்கள் எடுக்க, மும்பை 161 என்ற கெளரவான ஸ்கோரை எட்டியது.

கொல்கத்தாவிற்கு வழக்கம்போல் ரகானே, பில்லிங்ஸ், ராணா ஏமாற்றமளிக்க, இந்த முறை ரஸலும் ஏமாற்றினார். இருந்தாலும் துவக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அரைசதமடித்து அணியை ஆட்டத்திற்குள்ளே வைத்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாரா விதமாய் பேட் கம்மின்ஸ் டேனியல் சாம்ஸின் 16வது ஓவரில் 35 ரன்களை நொறுக்கி, 14 பந்தில் அரைசதமடித்து, அதே ஓவரில் ஆட்டத்தையும் முடித்துவிட்டார்.

போட்டியின் முடிவுக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தோல்விக்குறித்து வேதனையைப் பகிர்ந்து கொண்டார். அதில் “பாட் கம்மின்ஸ் இதுபோல் விளையாடுவார் என்று நினைக்கவே இல்லை. இதற்கான முழு அங்கீகாரமும் அவருக்கே. ஆடுகளம் துவக்கத்திலிருந்தே பேட்டிங் செய்ய எளிதாகவே இருந்தது. ஆனால் நாங்கள் துவக்கத்தில் ரன்கள் எடுக்கத் தவறிவிட்டோம். கடைசி ஐந்து ஓவர்களில் பேட்டிங் யூனிட் 70 ரன்களை குவித்தது நல்ல முயற்சி. ஆனால் நாங்கள் பந்துவீச்சில் எங்கள் திட்டங்களைச் சரியாகப் செயல்படுத்தவில்லை” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் ” 15 ஓவர் வரை ஆட்டம் கைகளில் இருந்தது. ஆனால் பாட் கம்மின்ஸ் புத்திசாலித்தனமாக ஆடிவிட்டார். நாங்கள் பாட் இல்லை வெங்கடேஷை வீழ்த்தினாலும், அடித்து அடிக்க நரைன் வெளியில் இருக்கிறார். இதை ஜீரணிக்கவே கடினமானது. நாங்கள் நிறைய கடினமாய் உழைக்க வேண்டும். இதே நிலையில் தொடர்ந்திருக்க விரும்பவில்லை” என்று விரக்தியாய் தெரிவித்தார்!