2025 விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக விளையாடும் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சிக்கிம் அணிக்கு எதிராக 62 பந்தில் சதம் அடித்திருக்கிறார்.
தற்போது இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி இன்று துவங்கியிருக்கிறது. இந்தத் தொடரில் இன்று மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் என முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.
விராட் ரோகித் சம்மதம்
இந்திய அணியின் 2 நட்சத்திர வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார்கள். மற்ற இரண்டு வடிவங்களில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து பார்மில் இருப்பதற்கு உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என இந்திய தேர்வுக்குழு கடும் அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்த நிலையில் இரண்டு வீரர்களும் விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு சம்மதித்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு திரும்பி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிக்கிம் முதலில் பேட்டிங் செய்து 236/7 ரன்கள் எடுத்தது.
ரோகித் சர்மா அதிரடி சதம்
இதைத் தொடர்ந்து மும்பை அணிக்கு களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களில் ரகுவன்சி 58 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் ரோகித் சர்மா வழக்கமான அதிரடியில் கலக்கினார். அவர் தனது அரை சதத்தை 28 பந்துகளில் எட்டினார்.
இதையும் படிங்க : டி20 WC.. இஷான் கிஷானுக்கு ஆட வாய்ப்பு கிடைக்குமா?.. கிரிக்கெட் எக்ஸ்பர்ட்ஸ் ஆச்சரிய தகவல்
தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 62 பந்துகளில் தலா எட்டு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். விராட் கோலியை விட ரோகித் சர்மா வயதில் மூத்தவர் என்பதால், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், அவர் எங்காவது கொஞ்சம் பார்ம் இல்லாமல் இருந்தால், அவரை அணியில் விட்டு நீக்க இந்தியத் தேர்வுக் குழு தயாராக இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் தேர்வுக் குழுவுக்கு சவால் கொடுத்திருக்கிறார்!






