வரவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்வது மற்றும் சவால்களைக் கடந்து கோப்பையை வெல்லும் நோக்கம் குறித்து ரோகித் சர்மா விவரித்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்குக் கைப்பற்றித் தந்த ரோகித் சர்மா, இதுவரை தான் வெல்லாத 50 ஓவர் உலகக் கோப்பையைக் கைப்பற்றி தனது நீண்ட நாள் கனவை நனவாக்கும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணியின் மூத்த வீரரான ரோகித் சர்மா தனது விருப்பம் குறித்து பேசும்போது “எனக்கு இருந்த பிசினஸ் முடிந்துவிட்டது என்ற எண்ணம் என் மனதிற்குள் ஒருபோதும் வராது. நீங்கள் விளையாடும் வரை, எதிர்நோக்குவதற்கு எப்போதும் ஏதேனும் ஒன்று இருக்கும். என்ன காத்திருக்கிறது என்பதைப் பார்த்து, நான் வேர்ல்ட் கப் தொடரை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து உலகக் கோப்பையின் சவால்கள் பற்றி ரோகித் சர்மா பேசும்போது “நாங்கள் வேர்ல்ட் கப் விளையாடும்போது அல்லது ஒரு ஐசிசி டோர்னமென்ட் விளையாடும்போது அதற்குரிய தனித்துவமான சேலஞ்ச் இருக்கும், ஏனென்றால் நீங்கள் வெவ்வேறு அப்போனென்ட்ஸ்களை எதிர்கொள்வீர்கள், வெவ்வேறு வென்யூக்களில் விளையாடுவீர்கள். அதனால் நீங்கள் வித்தியாசமாக பிரிபேர் செய்ய வேண்டும், வித்தியாசமான கோணத்தில் திங்க் செய்ய வேண்டும், அதுவே மிகப்பெரிய சேலஞ்ச்” என்று கூறி இருக்கிறார்.
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வரவிருக்கும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று தருவதையே ரோகித் சர்மா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார்.