இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத் நகரின் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்க இருக்கிறது.
இந்திய வெள்ளை பந்து அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறார். ஆனால் சிவப்புப் பந்துக்கு தனி ஒரு கேப்டனாக விராட் கோலி தனித்து நிற்கிறார்.
எனவே ரோகித் சர்மா விராட் கோலியை தாண்டி மிகச் சிறப்பான கேப்டன்சியை களத்தில் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும் விளையாட இருக்கின்ற அணி அனுபவம் வாய்ந்த அதிரடியாக விளையாடக்கூடிய இங்கிலாந்து அணி.
இப்படியான காரணங்களால் தனிப்பட்ட முறையில் கேப்டன் ஆன ரோகித் சர்மாவுக்கு ஒரு சிறிய நெருக்கடி இருக்கிறது. இந்தத் தொடரில் அவர் தன்னுடைய திட்டங்களால் அதை முறியடித்துக் காட்ட வேண்டும்.
மேலும் இந்திய அணி உலகக் கோப்பையை தோற்றத்திற்குப் பிறகு, தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை இழந்தது.
இதற்குப் பிறகு இந்திய அணிக்கு மிகப்பெரிய தொடராக அமைந்திருப்பது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான். எனவே இந்தத் தொடரை மிகப்பெரிய சாதனை வெற்றியாக மாற்ற வேண்டுமென இர்பான் பதான் விரும்புகிறார். இங்கிலாந்து அணியை ஐந்துக்கு பூஜ்ஜியம் என வொயிட் வாஷ் செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “இங்கிலாந்து ஆக்ரோஷமான அதிரடியான கிரிக்கெட்டை கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அவர்கள் சுழல் சவாலை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் விளையாடுகின்ற காரணத்தினால், ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் வெல்வது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.
பெரும்பாலும் இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் வெற்றிகளை பெரும்பாலும் கொண்டாடுவது கிடையாது. ஆனால் இங்கிலாந்து அணி அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் வருகிறது. எனவே நாம் அவர்களை வொயிட் வாஷ் செய்து கொண்டாடுவது வேறு லெவலில் இருக்கும்”எனக் கூறியிருக்கிறார்.