சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்த தனிப்பட்ட சாதனையை முறியடித்துள்ள ரோஹித் ஷர்மா !

0
102
Rohit sharma new t20 records

இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் ஷிகர் தவான் தலைமையில் 3-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணியோடு மோதுகிறது.

இந்த டி20 தொடரில் ஒருநாள் போட்டி தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணிக்குத் திரும்பினார்கள். மேலும் ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ் இருவரும் மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வந்திருக்கிறார்கள்!

- Advertisement -

இன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இரவு எட்டு அணிக்கு ஆரம்பித்து நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் நம்பர் 3ல் தீபக் ஹூடாவிற்குப் பதிலாக ஸ்ரேயாஷ் ஐயரும், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்து வீச்சாளர்களாக ஆர்.அஷ்வினும், ரவி பிஷ்னோயும் இடம்பெற்றிருக்கின்றர்!

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் புதுமுயற்சியாக கேப்டன் ரோகித் சர்மாவோடு சூர்யகுமார் யாதவ் இறக்கப்பட்டாய். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்க்க, சூர்யகுமார் 24 [16] ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து ஆட்டம் மெல்ல வெஸ்ட் இன்டீஸ் பக்கம் சாயத் துவங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவோடு இணைந்த ஸ்ரேயாஷ் 0, ரிஷான் பண்ட் 14, ஹர்திக் 1 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். ஆனால் பொறுப்பாகவும் தேவைக்கு அதிரடியாகவும் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் ஏழு பவுண்டரி, இரண்டு சாக்ஸர்களோடு 64 ரன்கள் குவித்தார். இது அவருக்கு சர்வதேச டி20 போட்டியில் 31வது அரைசதம் ஆகும்.

- Advertisement -

அடுத்து ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழங்க, 16 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பின்பு இணைந்த தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் ஜோடி அதிரடியாய் ரன் திரட்டியது. கடைசி 25 பந்தில் இந்த ஜோடி 52 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக்கின் 19 பந்துகளில் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகளோடு 41 ரன்களை நொறுக்கினார். ஆர்.அஷ்வின் ஒரு சிக்ஸரோடு பத்துப் பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு, கடைசியில் யாரும் எதிர்பாராத விதமாக 190 ரன்களை குவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்ததின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீரல் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

ரோகித் சர்மா – 31
விராட்கோலி – 30
பாபர் ஆசம் – 27
டேவிட் வார்னர் – 23
மார்டின் கப்தில் – 22

இந்த சாதனை மட்டுமல்லாது சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் மார்டின் குப்திலிடம் இருந்து மீண்டும் பறித்திருக்கிறார். தற்பொழுது மார்டின் கப்தில் இரண்டாவது இடத்தில் இருக்க, விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்!