ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர நகர, இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையும், செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் இருபது ஓவர் உலகக்கோப்பையையும் மனதில் வைத்து நகர்வுகளை ஆரம்பித்து விட்டது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இந்திய இளம் வீரர்களின், குறிப்பாக இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்புகள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அதேசமயத்தில் இவர்களிலிருந்து யார் யாரை இந்திய அணிக்குள் எடுப்பது என்கின்ற ஆரோக்கியமான நெருக்கடியும் உருவாகி இருக்கிறது.
இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இப்படியொரு நெருக்கடியை இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களுக்குத் தந்தால், இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் வேறொரு விதமான நெருக்கடியைத் தருகிறார்கள். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி, இந்தாள் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் படுமோசமாய் இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் எடுத்து, இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடும், ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடருக்கும், அடுத்து அயலாந்தில் நடக்கும் இரண்டு இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளித்து, நேராக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் களமிறக்கும் திட்டம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் சில இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
இதுக்குறித்து பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையும், வீரர்களின் பணிச் சுமையையும் கருத்தில் கொண்டு, ஒரு மூனு வாரங்கள் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட் போன்ற வீரர்களுக்கு, தென்ஆப்பிரிக்க அணியுடனான மற்றும் அயர்லாந்து அணியுடனான தொடர்களில் ஓய்வளிக்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த இரு தொடர்களுக்கும், ஷிகர் தவான் இல்லை ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்!