இந்திய மற்றும் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

0
215
Robby

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராபின் உத்தப்பா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.

ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். இவரது கடைசி ஒரு நாள் போட்டி 2015 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அமைந்தது. இதேபோல் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். இவரது கடைசி டி20 போட்டி 2015 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிராக அமைந்தது.

- Advertisement -

இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் ஆறு அரை சதங்களையும், டி20 போட்டிகளில் ஒரே ஒரு அரை சதத்தையும் அடித்திருக்கிறார். 142 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9446 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காத இவர், முதல் தரப் போட்டிகளில் 22 சதங்களையும்,
52 அரை சதங்களையும் விளாசி இருக்கிறார்.

இந்திய உள்நாட்டு டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இவர் மிகவும் கவனிக்கத்தக்க முக்கியமான வீரராக இருந்துள்ளார். குறிப்பாக கொல்கத்தா அணிக்கு இவரது பங்களிப்பு மிகப்பெரியது. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் முதன்முதலில் மும்பை, கொல்கத்தா, பெங்களூர், புனே வாரியர்ஸ் என தற்போது சென்னை அணியில் விளையாடி வருகிறார்.

ராபின் உத்தப்பா தனது ஓய்வு குறித்த அறிக்கையில் ” எனது நாட்டையும் எனது மாநிலமான கர்நாடக மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரிய கவுரவம் ஆகும். எவ்வாறாயினும் அனைத்து நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும். நன்றி உள்ள இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டில் எல்லா விதமான வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் ” என்று தெரிவித்துள்ளார். அவரது முழு அறிக்கை ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -