மூத்த வீரர்கள் பங்குபெறும் லெஜெண்ட் கிரிக்கெட் டிராபி தொடர் இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 13வது போட்டியில் டெல்லி டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பாக பேட்டிங் செய்து 79 ரன்கள் குவித்து அசத்தினார்.
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழக்க, 2 விக்கெட்டுகளுக்கு 16 ரன்கள் என்ற நிலையில் டெல்லி அணி தத்தளித்துக் கொண்டிருந்தது.
அப்போது பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக களமிறங்கிய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா டெல்லி அணியை நிமிர வைத்தார். அவர் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவிக்க, அவருக்கு பக்கபலமாக இருந்த பெர்குசன் 29 ரன்களை குவித்தார். இறுதியில் 15 ஓர்கள் முடிவில் டெல்லி அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கோணி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 165 ரன்கள் தேவை என ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சக்சேனா முதல் பந்திலையே டக் அவுட் ஆகி வெளியேற, அணியின் கேப்டன் ராபின் உத்தப்பா 12 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய ஏஞ்சலோ பெரேராவும், பீட்டர் ட்ரிக்கோவும் இணைந்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
சிறப்பாக விளையாடிய ஏஞ்சலோ பெரேரா 43 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என சதம் விளாசி அசத்தினார். மற்றொரு வீரரான பீட்டர் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் என 42 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதி செய்தனர்.
இந்தப் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தாலும், அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆடிய விதம் ரசிகர்களால் வெகுவாகக் கவரப்பட்டது. போட்டியின் போது மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அவர், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சனை முதலில் நிதானமாக எதிர்கொண்டாலும், அதற்குப் பிறகு தனக்கே உரித்தான அதிரடி பாணியில் ஆடினார்.
இதையும் படிங்க: லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபி 2024.. 7 டீம் 95 வீரர்கள்.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்
39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் என விளாசி 79 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தத் தொடரின் மூலம் சுரேஷ் ரெய்னா மிகச் சிறந்த பார்மில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்த அதிரடி ஆட்டம், முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய இன்னிங்ஸ்களை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியது. இந்தப் போட்டி சுரேஷ் ரெய்னா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது என்றும் சொல்லலாம்.