இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பு ஏற்று முதல் முறையாக அணி உடன் இணைந்து இலங்கை சுற்றுப்பயணத்திற்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் பழைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இருந்து கம்பீர் என்ன வித்தியாசமாக செய்வார்? என்பது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கம்பீர் தலைமையில் விளையாடிய ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
பொதுவாக பணிக்குள் திறமையான இளம் வீரர்கள் யாராவது வரும்பொழுது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்து அணிக்கு புதிய கேப்டன் வரும்பொழுது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தற்பொழுது இதைவிட அதிகமாக கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்புக்கு வந்தது எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பிலும் ஆக்ரோஷம் கொண்டவராக, எப்பொழுதும் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டவராக, வீரர்கள் தங்களுடைய இடத்திற்காக சுயநலமாக விளையாடக்கூடாது என்பதில் உறுதியானவராகவும் இருப்பது, ரசிகர்களுக்கு கம்பீர் வருகையை எதிர்பார்ப்பு மிக்கதாக மாற்றி இருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்ததால் கம்பீர் உடைய தலைமைத்துவ பாணி பெரிய அளவில் மாறாது. ஆனால் அவர் அணிக்கு கொண்டு வரும் ஆர்வமும் தீவிரமும் வித்தியாசமானதாக இருக்கும். அவர் நேர்மையான தலைவராகவும், தனது அணிக்கு பாதுகாப்பை வழங்க கூடியவராகவும் இருப்பார். எனவே ரோகித் மற்றும் டிராவிட் உருவாக்கிய கூட்டணியை விட ரோகித் கம்பீர் உருவாக்கும் கூட்டணி வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால்நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்.
கம்பீர் எப்பொழுதும் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செழித்து வந்தவர். பெரியபோட்டிகளை தனக்கான வாய்ப்பாகப் பார்த்தவர். எனவே தற்போதைய இந்திய அணியின் தலைவராக நான் அவரையே பார்க்கிறேன். அவர் எப்படி இப்படியான மனப்பான்மையில் இருந்தாரோ அதையே வீரர்களிடமும் தேடுவார் மற்றும் உருவாக்குவார். அவர் வீரர்கள் சிறப்பான முறையில் வளர்வதற்கான சூழ்நிலையையும் பாதுகாப்பையும் கொடுப்பார். நான் உறுதியளிக்கிறேன் நிச்சயம் இதை அவர் செய்வார்.
இதையும் படிங்க: 2023 உலககோப்பை.. ஆஸி இந்தியாவுல போட்ட திட்டத்தை ஹெட் சொன்னார்.. மிரண்டு போயிட்டேன் – அபிஷேக் சர்மா பேட்டி
கம்பீர் ஒரு சிறந்த கேப்டன் மட்டும் கிடையாது, சிறப்பான முறையில் திட்டங்களையும் வகுக்கக் கூடியவர். அவர்நம்ப முடியாத அளவுக்கு வீரர்களின் கேப்டனாக சிறப்பாக இருப்பார். வீரர்கள் நல்ல முறையில் வளர்ந்து வருவதற்கான உள்கட்டமைப்புகளை அணியில் ஏற்படுத்துவார்.பாதுகாப்பற்ற இடத்தில் இருந்து உருவாகி வருவதை விட இப்படியான பாதுகாப்பான இடத்தில் இருந்து உருவாகி வருவது எளிமையானது மற்றும் சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.