நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணி, இதற்கு அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்திய அணியின் இந்தச் சுற்றுப்பயணத்தில் ரியான் பராக் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் தற்போது பேட்டி அளித்திருக்கிறார்.
இந்திய அணி இன்று புதன்கிழமை ஜிம்பாப்வே நாட்டை சென்று அடைந்தது. சுப்மன் கில் தலைமையில் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. முழுக்க இளம் வீரர்களால் நிரம்பி இருக்கும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குறித்து ரியான் பராக் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டுக்கு மேலாக அசாம் மாநில அனிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சுழல்பந்து ஆல்ரவுண்டராக இவர் மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது..
இந்தத் தொடருக்கு இந்திய அணியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட ரியான் பராக் பேசும் பொழுது “சிறுவயதிலிருந்தே இதுபோன்று நான் பயணம் செய்ய வேண்டும் என பெரிய கனவு கண்டு கொண்டிருந்தேன். நாங்கள்நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆனால் அணி உடன் பயணம் செய்வது மற்றும் இந்திய ஜெர்சியை அணிவது போன்ற பிற விஷயங்கள் தனித்துவமானது.
எனது பாஸ்போர்ட் மற்றும் மொபைலை நான் மறந்து விட்டேன். அவற்றைத் தவற விட்டிருந்த எனக்கு பிறகு இரண்டும் கிடைத்தது. தற்பொழுது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்த அணி கிட்டத்தட்ட புதிய அணி. ஆனாலும் கூட இந்த அணியில் இருக்கும் நிறைய வீரர்களுடன் நான் ஏற்கனவே விளையாடி விட்டேன்.
இதையும் படிங்க : நான் செலக்ட்டானதும்.. இந்திய டீம்ல இருந்து இவர்தான் போன் பண்ணார்.. வீட்டுக்கு போனா அதைவிட ஆச்சரியம் – அபிஷேக் சர்மா பேட்டி
அசாமை சேர்ந்த ஒரு சிறுவன் இது பற்றி எப்பொழுதும் கனவு கண்டு கொண்டு இருந்தான். இப்போது அது இறுதியாக நனவாகி இருக்கிறது. நான் என்னுடைய முதல் போட்டியில் விளையாடும் பொழுது அது அந்த மைதானத்திற்கும் மற்றும் எனக்கும் சிறப்பானதாக இருக்கும்”என்று கூறியிருக்கிறார்.