தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து மூன்று முறை பந்தில் அடி வாங்கி களத்தை விட்டு வெளியேறியது இந்திய அணிக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.
தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காயம்
ரிஷப் பண்ட் இதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காலில் காயமடைந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வெளியில் இருந்தார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்பி வந்திருக்கிறார்.
மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் உலக சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடரை இந்திய அணி முழுமையாக வெல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
மீண்டும் காயம்
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மொத்தம் 22 பந்துகளை எதிர் கொள்வதற்குள், வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து மூன்று முறை அடிபட்டார். இதில் கடைசியாக அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் உள்ளே அழைக்கப்பட்டார்கள். ஆனால் ரிஷப் பண்ட் கையை மடக்க கடினமாக இருக்கிறது என்று கூறியதால் அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : அபிஷேக் புயல்.. கில் வெறும் டேபிள் ஃ பேன்.. அவர் தப்பிக்க காரணமே இவரால்தான் – சடகோபன் ரமேஷ் விமர்சனம்
மேலும் ரிஷப் பண்ட் காயம் எந்த நிலையில் இருக்கிறது என்று எதுவும் கூறப்படவில்லை. இத்துடன் அவர் காயம் கொஞ்சம் பெரியதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி வருவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது கவலை தரும் செய்தியாக மாறி இருக்கிறது.






