முக்கியமான போட்டியில் மோசமான முடிவுகள் எடுத்த கேப்டன் ரிஷப் பண்ட் குறித்து ரிக்கி பாண்டிங் பேச்சு

0
259
Ricky Ponting about Rishabh Pant

நடப்பு ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிய ஒரு ஆட்டம் எஞ்சியிருக்க, நேற்று 69வது ஆட்டத்தில் மும்பையின் வான்கடே மைதானத்தில் டெல்லி அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பை அணி தனது முதல் எட்டு ஆட்டங்களின் தோல்வியால் அப்போதே ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருந்தாலும், டெல்லி இந்த ஆட்டத்தில் வென்றால், பெங்களூர் அணியை ரன்ரேட்டால் வெளியேற்றி ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் என்கிற நிலை இருந்ததால், இந்த ஆட்டம் மும்பை, டெல்லி, பெங்களூர் என மூன்று அணி இரசிகர்கள் பெரியளவில் கவனம் செலுத்தும் முக்கிய போட்டியாக அமைந்திருந்தது.

நேற்றைய போட்டியில் மும்பை அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டு டிவால்ட் பிரிவீஸூம், டெல்லி அணியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு பிரித்வி ஷாவும் உள்ளே வந்திருந்தனர். முதலில் டாஸில் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் ஆட்டத்தை துவங்க வார்னரும் பிரித்வி ஷாவும் வர, இவர்கள் இருவரையும் சீக்கிரத்தில் சாம்ஸ்-பும்ரா ஜோடி வெளியேற்றியது. நடுவில் வந்த மிட்ச்செல் மார்ஸ் மற்றும் சர்ப்ராஸ் கான் இவர்களும் வெளியேற டெல்லிக்கு நெருக்கடி உருவானது. ஆனால் கேப்டன் ரிஷாப் பண்ட்டும் ரோமன் பவெலும் நின்று விளையாடி அணியை மீட்டனர். இவர்கள் இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களின் முடிவில் 159 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா பெரிய தடுமாற்றத்தோடு விளையாடி இரண்டு ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிவால்ட் பிரீவிஸ், இஷான் கிஷன் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியை மீட்டது. ஆனால் இஷான் கிஷன் ஆட்டமிழந்ததும் டெல்லி அணியின் பக்கம் ஆட்டம் அப்படியே திரும்பியது. சர்துல் தாகூரின் ஓவரின் டிவால்ட் பிரிவீஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் தான் சந்திந்த முதல் பந்திலேயே பார்ப்பவர்களுக்குச் சத்தம் கேட்குமளவிற்கு எட்ஜ் எடுத்தார். ஆனால் பந்தை பிடித்த கேப்டன் ரிஷாப் பண்ட், பந்தை வீசிய சர்துல் தாகூர் ஆகியோர் வலிமையாய் முறையீடும் செய்யவில்லை. அம்பயர் அவுட் மறுத்த போது, மேல் முறையீட்டுக்கும் செல்லவில்லை.

அப்போது டெல்லி அணியிடம் இரண்டு ரிவீவ்கள் அப்படியே இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பந்தில் பூஜ்யத்தில் தப்பித்த டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்களை நொறுக்கினார். இதில் இரு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதனால் மும்பை அணி எளிதாக 19.1 ஓவர்களில் டெல்லி அணியை வீழ்த்தியது. இத்தோடு டெல்லி அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேற, பெங்களூர் அணி ப்ளேஆப்ஸ் சுற்றில் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் டிம் டேவிட்டுக்கு ரிவீவ் எடுக்காதது, டிவால்ட் பிரிவீஸ் தந்த எளிமையான கேட்ச்சை விட்டது என்று கேப்டன் ரிஷாப் பண்ட் செய்த தவறுகளால்தான் டெல்லி அணி தோற்றது என்று கூறினால் அது மிகையில்லை.

இந்தச் சூழலில் ஆட்டம் முடிந்ததும், இது குறித்துப் பேசிய டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் “ரிஷாப் பண்ட் இளைஞராக இருக்கிறார். அவன் இன்னும் கேப்டன்ஷிப் குறித்துக் கற்றுக்கொள்ளலாம். இருபது ஓவர் போட்டிகளுக்கு, குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக இருப்பது, அதிக அழுத்தத்தை ஏற்படுத்த கூடியது. இது சுலபமான ஒரு விசயம் கிடையாது. இங்கு கேப்டனாக செய்யப்படும் ஒவ்வொரு விசயங்களும் ஆராயப்படும். ரிஷாப் பண்ட்க்கு நிச்சயம் எனது முழுமையான ஆதரவு உண்டு” என்று கூறினார்.

- Advertisement -