இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா மைதானங்களில் விளையாடுவதற்கு பயப்படுவது இல்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
இந்திய அணி முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு ரகானே தலைமையில் இந்திய இளம் வீரர்கள் கொண்ட அணி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
ஸ்டீவ் வாக் – ரிக்கி பாண்டிங்
1990 முதல் 2000 ஆம் ஆண்டுகள் தாண்டி ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் வலிமையான ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக இருந்த காலகட்டங்களில், ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடரில் அவர்களது மண்ணில் தோற்கடிப்பது என்பது கனவில் கூட முடியாத காரியமாக இருந்தது.
ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வது என்பதை விட, டெஸ்ட் போட்டியை வெல்வதே மிகப்பெரிய விஷயமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலும் மாற்றிய கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். வேகப்பந்து வீச்சு மற்றும் உடல் தகுதிக்கு விராட் கோலி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, வெற்றிக்காக ஆடும் மனநிலையை அணிக்கு உருவாக்கினார். இங்கிருந்துதான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எழுச்சி ஆரம்பித்தது.
இந்திய அணி பயப்படுவதில்லை
இது குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “அவர்கள் இறுதியாக காபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றார்கள். இது அடிக்கடி நடக்காது. ஆனால் இந்திய அணியினர் ஆஸ்திரேலிய நிலைமையில் விளையாட பழகிவிட்டார்கள். அவர்கள் காபா மற்றும் ஓவல் போன்ற மைதான சூழ்நிலைகளில் பயப்படுவது கிடையாது. இது தேர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம், அல்லது இனி அவர்கள் பெரிய மேடைகளுக்கு பயப்பட மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் இருந்து நிறைய இந்திய இளம் வீரர்கள் உருவாகி வெளியே வருகிறார்கள். ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவு அழுத்தம் இருப்பதால் அதை நான் உலகக் கோப்பை போன்றே நினைக்கிறேன். வீரர்கள் அனைவருமே தைரியமாக ஸ்ட்ரோக் செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தோல்வியைக் கண்டு பயப்படுவது கிடையாது.
இதையும் படிங்க : 6 விக்கெட்.. மைக்கேல் வாகன் மகன் அசத்தல் பவுலிங்.. இங்கிலாந்துக்கு புது ஆல்ரவுண்டர் கிடைச்சாச்சு
இந்திய அணியிடம் நல்ல வேகப்பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. அவர்களுக்கு கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக விராட் கோலியின் வருகையில் நல்ல தலைமை இருந்தது. மேலும் ராகுல் டிராவிட்டும் அதையே தொடர்ந்தார். விராட் கோலி போன்ற ஒருவரின் செல்வாக்கு அணியை சுற்றி இருக்கும் போது நன்றாக இருக்கும். மேலும் அவர்களுக்கு நட்சத்திர வீரர்களும் கிடைத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.