தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். இவரது சாதனையை யார் முறியடிக்க முடியும்? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையாளராக இந்தியாவின் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து வருகிறார். அவரது சாதனையை முறியடிப்பது மட்டுமல்ல முறியடிக்கக் கூடிய வாய்ப்பில் இருப்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க கூடிய அதற்கான வாய்ப்பில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12000 ரன்களை கடந்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் நீடிக்கிறார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள 15,491 ரன்களை விட தற்போதைக்கு நான்காயிரம் ரன்கள் பின்தங்கி இருக்கிறார். மேலும் சச்சின் 51 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்க ஜோ ரூட் 32 சதங்கள் அடித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு 33 வயதாகிறது. இதையெல்லாம் கணக்கிட்டு இது குறித்து ரிக்கி பாண்டிங் விளக்கமாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “தற்போது ஜோ ரூட்டுக்கு 33 வயதாகிறது. இங்கிலாந்து வருடத்திற்கு டெஸ்ட் போட்டிகள் எவ்வளவு விளையாடுகிறது என்பதை பொறுத்து இது அமையும். அவர்கள் ஒரு வருடத்திற்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால், ஜோ ரூட் வருடத்திற்கு 800 முதல் 1000 ரன்கள் குவித்தால், அவரால் அடுத்த நான்கு வருடங்களில் தன்னுடைய 37 ஆவது வயதில் சச்சின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
இதையும் படிங்க : துலீப் டிராபியில் ரிங்கு சிங் சேர்க்கப்படாதது ஏன்?.. விளையாட வாய்ப்பு உண்டா – வெளியான தகவல்கள்
அதே சமயத்தில் 30 வயதுக்கு மேல் பேட்ஸ்மேன்களில் பேட்டிங் மிகவும் சிறப்பாக மாறுகிறது என்று கூறப்படும். இதற்கு ஏற்ற வகையில் அவர் அரைசதங்களை சதங்களாக மாற்றும் விகிதமும் சிறப்பாக மாறி இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் நிறைய அரை சதங்கள் அடித்து அதை சதமாக மாற்ற முடியாமல் சிரமப்பட்டார். தற்போது அவருடைய அரை சதங்கள் அதிகமாக சதங்களாக மாறி வருகின்றன. எனவே இந்த வகையில் கூட அவர் சச்சின் சாதனையை முறியடிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.