இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி துவங்க இருக்கும் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துலீப் டிராபிக்கு நான்கு அணிகள் அறிவிக்கப்பட்டது. நிறைய இந்திய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்ற நிலையில் ரிங்கு சிங் புறக்கணிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்பது குறித்தான செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணியில் இளம் வீரர்களில் ஆரம்ப கட்டத்தில் வாய்ப்பு பெற்ற ருதுராஜ் முதல் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள ரியான் பராக் வரையில் 25க்கும் மேற்பட்ட முக்கிய வீரர்கள் நடப்பு துலீப் டிராபியில் விளையாடுகிறார்கள். மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தேசிய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் பங்கேற்று விளையாடும் கலாச்சாரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மூத்த வீரர்களை எடுத்துக் கொள்ளும் பொழுது ரவீந்திர ஜடேஜா கேஎல்.ராகுல் முதல் கொண்டு பணிச்சுமை நிர்வகிக்க வேண்டிய முகமது சிராஜ் வரையில் எல்லோருமே கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள். இதன் காரணமாக ரசிகர்களுக்கு இந்தத் தொடரின் மீது எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
இப்படியான நிலையில் ரிங்கு சிங் புறக்கணிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் 47 போட்டிகளில், 55 ரன் ஆவரேஜில் 3173 ரன்களை ரிங்கு சிங் குவித்திருக்கிறார். இதில் ஏழு சதங்கள் 20 அரை சதங்கள் அடக்கம்.
இந்த நிலையில் திலீப் டிராபி இரண்டாவது சுற்றில் ரிங்கு சிங் விளையாட வைக்கப்படுவார் என்கின்ற செய்திகள் வெளிவந்திருக்கிறது. இரண்டாவது சுற்று போட்டிகள் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக 19 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
இதன் காரணமாக ஜெய்ஸ்வால், கில், ஸ்ரேயாஸ் அய்யர், சர்பராஸ் கான், கேஎல்ராகுல் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது சுற்றில் விளையாடாமல் இந்திய அணிக்கு திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் விளையாட ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : உலக கோப்பையை நடத்த கேட்ட ஐசிசி.. திட்டவட்டமாக மறுத்த பிசிசிஐ – ஜெய் ஷா வெளியிட்ட தகவல்
ரிங்கு சிங் நிச்சயம் இந்திய அணிக்காக மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடிய திறமையை பெற்ற வீரராக இருக்கிறார். மூன்று வடிவத்திலுமே உள்நாட்டு போட்டிகளில் அவரது பேட்டிங் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. எனவே துலீப் டிராபி இரண்டாவது சுற்றில் விளையாடுவார் என்று நம்பலாம்.