24 வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு.. நவீன் உல் ஹக் ஆச்சரியமான அறிவிப்பு.. காரணங்கள் என்ன?

0
2461
Naveen

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நாளை மறுநாள் முதல் துவங்க இருக்கின்றன.

நடக்க இருக்கும் இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பென் ஸ்டோக்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சாதனை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

எல்லா வீரர்களும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் ஏதாவது சம்பாத்தியம் செய்து கொள்ள பார்ப்பார்கள். நானும் அதையே நினைக்கிறேன். இந்த காரணத்தால்தான் நான் ஓய்வு பெறுகிறேன் என்று வெளிப்படையாக அவர் கூறியிருந்தார்.

இன்னொரு பக்கத்தை எடுத்துப் பார்த்தால் டி20 கிரிக்கெட்டின் வருகை பல நாடுகளில் டி20 லீக்குகள் நடத்துவதை அதிகரித்து இருக்கிறது. எப்போதும் இருந்ததை விட டி20 கிரிக்கெட்டுக்கு தற்போது பெரிய ஆதரவு ரசிகர்களிடம் இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பும் வீரர்கள் கூட, ஒருநாள் கிரிக்கெட் விளையாட விரும்புவது இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகப்படியான உழைப்பை கொடுக்க வேண்டியது இருக்கிறது. இதனால் காயமடையவும் வாய்ப்பு உண்டு. அதே சமயத்தில் டி20யில் இரண்டும் மிகக் குறைவு. எனவே உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாடவே வீரர்கள் விரும்புகிறார்கள்.

இந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் வலது கை வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். இவருடைய வயது 24 தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடுகிறார் என்பது நாம் அறிந்ததே!

ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. இந்த உலகக்கோப்பையின் முடிவில் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனது நாட்டிற்காக டி20 கிரிக்கெட்டில் நீல ஜெர்சியை தொடர்ந்து அணிவேன். இது எளிதான முடிவு அல்ல. எனது விளையாட்டு வாழ்வை நீடிக்க இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!