பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தீவிர ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஒரு வேளை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இறுதிப் போட்டியை பாகிஸ்தானில் நடத்த முடியாத வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
2008ஆம் ஆண்டு விளையாடிய இந்தியா
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது.போட்டி நடைபெற உள்ள மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. போட்டிகள் ஆனது பாகிஸ்தானில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதால் அதில் இந்திய அணி விளையாடுவதில் சிக்கல் ஏற்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய நிலையில் அதற்குப் பிறகு இரண்டு உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாக பாகிஸ்தானில் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்து வந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஒருவேளை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழக்க நேரிடும்.
இறுதிப் போட்டியை நடத்துவதில் சிக்கல்
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, இறுதிப் போட்டியை லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மீதமுள்ள போட்டிகளை கராச்சியின் தேசிய மைதானம் மற்றும் ராவல் பின்டியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ள போட்டி மார்ச் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க:எங்கள எங்க மண்ணுல ஜெயிக்க.. இந்திய அணியில் இவங்களால மட்டும் தான் முடியும் – ஷேன் வாட்சன் கருத்து
போட்டிக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி விளையாடுவதற்கான எந்த தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய இறுதிப் போட்டி இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் போட்டியை துபாய் மைதானத்திற்கு மாற்ற நேரிடலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஒருவேளை இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் போட்டி திட்டமிட்டபடி லாகூரில் நடைபெறும். ஒருவேளை தகுதி பெற்றால் இரண்டாம் அரை இறுதிப் போட்டிக்குப் பிறகு இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் தெரியவரும்.