இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தற்போது தனித்து முடிவுகள் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாகவும் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது அவர் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கு கேப்டனாக இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் தொடராக இருந்தது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்து அவர் வெளியேறி விட்டார். அந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி தோற்றது.
இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் மீதும் பயிற்சியாளர் கம்பீர் மீதும் நிறைய விமர்சனங்கள் உருவானது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மீதம் இருக்கும் போட்டிகளில் மூன்று போட்டிகளை மட்டுமே தோற்க முடியும். மற்ற அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சுப்மன் கில் கோரிக்கை
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு கேப்டன் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார். மேலும் யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிலைக்கு அவர் வந்திருக்கிறார்.
இதையும் படிங்க : ILT20 பைனல்.. பொல்லார்டின் மும்பை தோல்வி.. சுட்டிக் குழந்தை சாம் கரன் மிரட்டல்.. முதல் முறையாக கோப்பையை வென்ற டேசர்ட் வைப்பர்ஸ்
இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை விளையாடுவதற்கு முன்பாக 15 நாட்கள் கொண்ட நீண்ட பயிற்சி முகாமை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியை சிறப்பான முறையில் தயார்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் செல்ல இந்த பயிற்சி முகாம்கள் அவசியம் என அவர் கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.






