ஆசிய நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, பாபர் அசாம், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோர் ஒரே அணியில் விளையாடும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
17 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட தொடர் தற்போது மீண்டும் நடைபெற இருப்பதாக ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
2000ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஆப்ரோ ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆசியா 11 மற்றும் ஆப்பிரிக்கா 11 என்று இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் இடம் பெற்றனர். ஆப்பிரிக்கா லெவன் அணியாக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யாவை சேர்ந்த வீரர்கள் விளையாடினர். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் ஆசிய அணியில் ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர் போன்ற வீரர்கள் இணைந்து விளையாடினர்.
அதேபோல 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் MS தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் மஹேல ஜெயவர்த்தனே போன்றவர்கள் ஒரே அணியாக இணைந்து விளையாடினர். அதற்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் பிணைப்பு காரணமாக இந்த போட்டித் தொடர் கைவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஷா பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இந்த போட்டித் தொடரை மீண்டும் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது 2013ஆம் ஆண்டு ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக இது மீண்டும் தடைப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுமோத் இந்தத் தொடர் மீண்டும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருவதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “தனிப்பட்ட முறையில் இந்த தொடர் நடைபெறாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் போதுமான அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். இது அடிப்படையில் புரிதலின்மை காரணமாகவே நிகழ்ந்துள்ளது. இதற்காக எங்கள் உறுப்பினர்கள் வருத்தமடைகிறார்கள். ஆனால் தற்போது நடத்துவதற்கான பேச்சுவார்த்தை மேம்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. 2021க்கு பிறகு ரோகித் சர்மா உச்சம்.. 3 இலங்கை வீரர்கள் ஆச்சரியம்
மஹிந்தா மற்றும் ஜெய்ஷா ஆகியோர் ஐசிசி குழுவில் இருப்பதால் தற்போது இது நடைபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் போட்டி நாடுகளுக்கிடையே ஏற்பட இருக்கும் அரசியல் தடைகளை உடைப்பதற்கு பாலமாக இருக்கும். இதற்கு வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக தற்போதைய முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் பாபர் அசாம் போன்றோர் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.