இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்து விட்டார். விராட் கோலி ஓய்வு முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு முக்கிய நட்சத்திர இந்திய வீரரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
இந்திய அணி நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகின்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி துவங்குகிறது.
பும்ரா தரும் பிரச்சனை
தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் பும்ரா இன்னும் முழுமையாக குணமடைந்து விட்டார் என்று கூற முடியாத நிலையில் இருக்கிறார். முன்பு போல அவரை முழுமையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வைக்க முடியாது.
இதன் காரணமாக மாற்று வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வேகமாக தேடி வருகிறது. அதே சமயத்தில் இன்னொரு மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சமீபத்தில் சிறப்பான முறையில் செயல்படவில்லை. இதுவெல்லாம் சேர்ந்து தேர்வுக் குழுவுக்கு தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
இன்னொரு வீரர் விலகலாம்
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தானாக தேர்வாகும் நிலையில் இல்லை. அவருடைய ரன் அப் முடிக்க முடியாமலும், மேலும் அவர் வீசும் பந்துகள் பெரும்பாலும் விக்கெட் கீப்பருக்கு வேகமாக சென்று சேர்வதில்லை எனவும் தேர்வுக் குழு கருதுகிறது. அவர் காயத்தில் இருந்து குணம் அடைந்து விட்டாலும் கூட அவருடைய செயல்பாடு மந்தமாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க : 2027 ODI WC.. இங்கிலாந்து அணி நேரடி தகுதி பெறுவதில் சிக்கல்.. வெஸ்ட் இண்டீஸ் அபாரம் – நிலவரம் என்ன?
இதன் காரணமாக முகமது ஷமி மேற்கொண்டு இந்திய டெஸ்ட் திட்டங்களில் இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் அவரும் ஓய்வை அறிவிப்பதற்கான காலம் நெருங்கி விட்டதாக பார்க்கப்படுகிறது. தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத சூழ்நிலையில் முகமது ஷமி இல்லாமல் போவது இந்திய டெஸ்ட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.






