2025ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு இருக்கும் கேஎல்.ராகுல் தனது ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக புதிய ரோல் ஒன்றில் செயல்படலாம் என செய்திகள் தெரிவிக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மூன்று வருடங்களாக தொடக்க ஆட்டக்காரராகவும், கீப்பராகவும், கேப்டனாகவும் கேஎல்.ராகுல் செயல்பட்டு வந்தார். அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக்ரேட் மற்றும் கேப்டன்சி முடிவுகள் அணி உரிமையாளருக்கு விரும்பத்தக்க வகையில் இல்லை. இதன் காரணமாக அவர் அந்த அணியை விட்டு வெளியேறி தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு இருக்கிறார்.
இங்கிலாந்து வீரரால் வந்த பிரச்சனை
இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இங்கிலாந்து வளரும் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் வாங்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தங்களுடைய இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டி இருக்கிறது என்றும் அதனால் தன்னால் இந்த முறை ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்றும் கூறிவிட்டார். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல் அணியின் திட்டங்களில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது தமிழக மற்றும் முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேஎல்.ராகுலை ஒரு புதிய ரோலில் விளையாட வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதன் மூலம் சமநிலை கொண்ட ஒரு பேட்டிங் ஆர்டர் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கேஎல்.ராகுல் முதல் முறை
இதுவரையில் கே.எல்.ராகுல் தனது ஐபிஎல் வரலாற்றில் தொடக்க வீரராக மட்டுமே விளையாடி வந்திருக்கிறார். மிடில் ஆர்டரில் விளையாடும் ஹாரி புரூக் வெளியேறிய காரணத்தினால், அணியின் சமநிலைக்காக பயிற்சியாளர் ஹேமங் பதானி கேஎல்.ராகுலை மிடில் ஆர்டரில் விளையாட கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு அவர் சம்மதித்து விட்டார் என்றும் செய்திகள் கூறுகிறது.
இதையும் படிங்க : அடிச்சு சொல்றேன்.. குஜராத் அணியில் அந்த 24 வயது வீரர் அதிக விக்கெட் எடுப்பாரு.. அபார திறமை இருக்கு – ஹர்பஜன் நம்பிக்கை
மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு வேண்டாம் என்று கேஎல்.ராகுல் மறுத்து பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறிவிட்டார். தற்போது மிடில் ஆர்டரில் விளையாடவும் சம்மதித்து இருக்கிறார். ஏனென்றால் இந்திய டி20 அணிக்கு திரும்ப வேண்டும் என்றால், தொடக்க இடத்தில் விக்கெட் கீப்பராக வர முடியாது. எனவே மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக வருவதற்காக இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.






