ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த முறை பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்க உள்ளது.
அந்த அணியின் 24 வயது இளம் வேகபந்து வீச்சாளர் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
குஜராத் அணியில் இளம் வீரர்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதற்குப் பிறகு இரண்டாம் ஆண்டு இறுதிப் போட்டி வரை வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட அந்த அணியின் கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டார். இருப்பினும் முன்னணி வீரர்களின் இழப்பால் அந்த அணியால் கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் ஏலத்தில் திறமை மற்றும் அனுபவம் என சரிசமமான விகிதத்தில் வீரர்களை குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சூழ்நிலையில் 24 வயதான பஞ்சாபை சேர்ந்த குர்னூர் பிரார் 1.30 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய இளம் வீரர் குஜராத் அணிக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று அதற்கான காரணங்களை கூறியிருக்கிறார்.
ஹர்பஜன்சிங் நம்பிக்கை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குர்னூர் பிரார் இப்போது குஜராத் அணியில் இருக்கிறார், அவர் நல்ல திறமையான ஒரு வீரர். பஞ்சாப் அணிக்காக சிறந்த சீசனை அவர் விளையாடி இருக்கிறார். அவர் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளர். தற்போது அனுபவமான வீரராகவும் மாறி இருக்கிறார். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் அவருக்கு ஆஷிஷ் நெக்ரா போன்ற ஒருவர் இப்போது கிடைத்திருக்கிறார். சில வீரர்களுக்கு தோளில் கை வைக்க யாராவது ஒருவர் நிச்சயம் தேவை.
இதையும் படிங்க:டி20யில் என் ஆசை இதுதான்.. எங்க கோச் இதுக்கு சரின்னு சொல்ற வரைக்கும் தொடர்ந்து ட்ரை பண்ணுவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்
அதனால் அவருக்கு ஆஷிஸ் நெக்ரா ஒரு சிறந்த தோழமையோடு நல்ல பயிற்சியாளராக இருப்பார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவருக்கு நல்ல வேகம் இருக்கிறது எனவே அவர் சிறப்பாக செயல்படுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் அறிமுகமான இவர் 12 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024-2025 ரஞ்சி சீசனில் 7 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.






